`15,000 ரூபாய்ல ஒரு ரூபாய்கூட குறையக் கூடாது!' – வாரிசு சான்றிதழ் தர லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ கைது!

திருச்சி மாவட்டம், தாளக்குடியைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் ரத்தினகுமார். இவரது மனைவி தேவியின் தகப்பனார் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 2002 – ம் ஆண்டு காலமாகியுள்ளார். இந்நிலையில், அவரது பெயரில் உள்ள சொத்துகளை விற்பதற்காக ரவிச்சந்திரன் பெயரில் வாரிசு சான்றிதழ் வேண்டி திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22.8.2024 அன்று விண்ணப்பம் செய்துள்ளார். மறைந்த ரவிச்சந்திரன் வசித்த திருச்சி பீமநகர் பகுதிக்கு உட்பட்ட கோ.அபிஷேகபுரம் பகுதி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இவரது விண்ணப்பம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஆனால், ஒரு வாரம் ஆகியும் எந்த தகவலும் கிடைக்கப் பெறாதால் ரத்தினகுமார் நேற்று மதியம் ஒரு மணி அளவில் கோ.அபிஷேகபுரம் கிராம நிர்வாக அலுவலகம் சென்று அங்கே இருந்த வி.ஏ.ஓ செந்தில்குமார் என்பவரை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார். அதற்கு வி.ஏ.ஓ செந்தில்குமார் வாரிசு சான்றிதழ் கிடைப்பதற்கு தனக்கும் தனது உயர் அலுவலர்களுக்கும் சேர்த்து மொத்தம் 15,000 ரூபாய் கொடுத்தால் உடனடியாக பெற்று தருவதாக கூறியுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க மனமில்லாத ரத்தினகுமார் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என்று கூறியிருக்கிறார். அதையடுத்து வி.ஏ.ஓ செந்தில்குமார், ‘உங்களது மனுவை மேல் நடவடிக்கைக்கு அனுப்பி விடுகிறேன். அதற்காக எனக்கு மட்டும் தனியாக ரூ.3,000 கொடுத்து விடுங்கள்’ என்று கூறி ‘இறங்கி’ வந்துள்ளார்.

கைதான வி.ஏ.ஓ

எனினும், லஞ்சம் கொடுக்க விரும்பாத ரத்தினகுமார் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் டி.எஸ்.பி மணிகண்டனை சந்தித்து புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரத்தினகுமாருக்கு அளித்த ஆலோசனையின்படி, இன்று ரத்தினகுமார் தமது வாரிசு சான்றிதழ் மனு மீது உடனடி தீர்வு வேண்டி வி.ஏ.ஓ செந்தில்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.3,000 ரொக்கத்தை லஞ்சமாக கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்தனர். அதோடு, கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தமது உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என முதலில் ரூ.15,000 கேட்டது தொடர்பான மேல் விசாரணையை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அருகில் உள்ள வட்டாட்சியர் மேற்கு அலுவலகத்தில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். வாரிசு சான்றிதழ் தருவதற்கு கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் ரூ.15,000 லஞ்சம் கேட்டு கைதாகியுள்ள சம்பவம், திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.