ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கூலி’. இந்த படத்தில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் மூலமாகத் தமிழ்நாட்டில் பிரபலமான நடிகர் சௌபின் ஷாஹிர் நடிக்கிறார் என்ற அப்டேட் நேற்று வெளியானது. இந்நிலையில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளிவரவிருக்கிறது என்கிறார்களஷு
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’ படம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் ரஜினியின் 171-வது படமான ‘கூலி’ படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி இதற்கு முன்னர் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். நெல்சன் இயக்கிய அந்தப் படம் 600 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இப்படி ஒரு பிரமாண்டமான வெற்றிக்கும், வசூலுக்குமான காரணங்களில் ஒன்று, பல மொழியில் உள்ள திறமையான ஸ்டார்கள் இணைந்து நடித்ததும்தான் என்பதால், இப்போது தயாரித்து வரும் ‘கூலி’ படத்திலும் மல்டி ஸ்டார்கள் இணைந்து வருகின்றனர். லோகேஷின் முதல் படமான ‘மாநகரம்’ படத்தின் திரைக்கதையை லோகேஷுடன் இணைந்து அவரது உதவியாளர் சந்துரு எழுதியிருந்தார். இப்போது ‘கூலி’க்கும் அவர் ரைட்டராக இருக்கிறார். படத்தின் இணை இயக்குநரும் சந்துருதான்.
லோகேஷின் ஆஸ்தான தொழில்நுட்ப டீமான அன்பறிவின் ஸ்டண்ட், அனிருத்தின் இசை, பிலோமினின் படத்தொகுப்பு, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு இதிலும் உண்டு. நடிகர்களைப் பொறுத்தவரையில் தமிழிலிருந்து சத்யராஜ், மலையாளத்திலிருந்து சௌபின் ஷாஹிர், கன்னடத்திலிருந்து உபேந்திரா ஆகியோர் இப்போது இணைந்துள்ளனர்.
தெலுங்கிலிருந்து நாகார்ஜூனாவை நடிக்கக் கேட்டார்கள். ‘லியோ’ போல ‘கூலி’யும் ஆக்ஷன் த்ரில்லர்தான் என்றாலும் படத்தில் நிறைய மல்டி ஸ்டார்கள் இருப்பதால், தனக்கான முக்கியத்துவம் குறைவாக இருக்கும் என அவர் நினைக்கிறார். அதனால் அவரிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை என்கிறார்கள். ஆகையால், டோலிவுட்டிலிருந்து பிரமாதமான ஒரு ஸ்டாருடன் பேசி வருகின்றனர். அதைப் போல, ‘ஜெயிலர்’, ‘லியோ’வில் ஜாக்கி ஷெராஃப் நடித்தது போல, இதிலும் பாலிவுட் வில்லன் ஒருவர் இணைவார் என்கின்றனர்.
ஹைதராபாத், சென்னை என நடந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து இப்போது விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் காம்பினேஷனில் படப்பிடிப்பு மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 8 வாரங்களுக்கு மேல் அங்கே படப்பிடிப்பு தொடரும் என்கின்றனர். படத்தைக் கோடை கொண்டாட்டமாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.