கேரளாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களில்மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான `ஹேமா கமிட்டி’ அறிக்கை வெளியான நாள்முதல், மலையாள திரையுலகமே அதிர்ச்சியில் இருக்கிறது. குறிப்பாக, மலையாள திரையுலகில் முக்கிய பிரபலங்களான இயக்குநர் சித்திக், ரஞ்சித், நடிகரும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வுமான முகேஷ் உள்ளிட்ட பலர்மீது பாலியல் குற்றச்சாட்டுகள் வந்திருக்கின்றன.
இந்த விவகாரத்தில் நேற்று முன்தினம் வரையில், 17 பாலியல் புகார்கள் பதிவுசெய்திருப்பதாகவும், அனைத்தையும் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மறுபக்கம் மலையாள திரைப்பட சங்கமான அம்மாவில் (AMMA – Association of Malayalam Movie Artists) தலைவர் மோகன்லால் உட்பட பதவியிலிருக்கும் அனைவரும் கூட்டாகப் பதவி விலகியிருக்கின்றனர். திரைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கவேண்டிய சங்கத்தினரே இப்படி எதுவும் பேசாமல் அமைதியாக விலகுவது சரியா என பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.
இந்த நிலையில், அம்மா சங்கத்தினரின் செயலை கோழைத்தனமானது என நடிகை பார்வதி விமர்சித்திருக்கிறார். மோஜோ ஸ்டோரி (Mojo Story) என்ற யூடியூப் சேனலில் பேசிய பார்வதி, “இந்தக் கூட்டு ராஜினாமா பற்றிய செய்தியைக் கேட்டதும், `எவ்வளவு கோழைத்தனமான செயல்’ என்றுதான் எனக்குத் தோன்றியது. ஊடகங்களுக்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பான இடத்தில் இருந்துகொண்டு இவ்வாறு விலகுவது கோழைத்தனமானது” என்று கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தில் பெண்கள் புகாரைப் பதிவுசெய்யவேண்டும் என்றும், குற்றவாளிகளின் பெயரைக் குறிப்பிடவேண்டும் என்றும் மாநில அரசு எடுத்துரைக்கும் நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்திய பார்வதி, “மீண்டும் இதன் அவமானம் மற்றும் சுமைகளை நீக்குவதற்கான பொறுப்பு பெண்கள்மீதே சுமத்தப்படுகிறது” என்றார்.