UP: ஆயுள் தண்டனை `டு' ரூ.8 லட்சம் வரை வருமானம் – யோகி அரசின் புதிய சமூக வலைதள கொள்கைகள் கூறுவதென்ன?

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவைப் புதிய சமூக வலைத்தளக் கொள்கைகளை (UP New Social Media Policy, 2024) நடைமுறைப்படுத்த, அனுமதி வழங்கியுள்ளது. எக்ஸ், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்களில் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை வகைப்படுத்தவும், அவற்றின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் வழிகாட்டுதல்களை இந்தக் கொள்கைகள் வழங்கியிருக்கின்றன. 

உதாரணமாக, புதிய கொள்கையின்படி, சமூக வலைதளங்களில் தேச விரோத கருத்துக்களைப் பதிவிடுவது கடுமையான குற்றமாகக் கருதப்படும். 3 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை இதற்கான தண்டனை வழங்கப்படலாம் எனக் கூறுகின்றனர்.

சமூக வலைதளங்கள்

முன்னதாக இந்தக் குற்றங்களுக்குத் தகவல் தொழில்நுட்ப (IT) சட்டத்தின் பிரிவுகள் 66E மற்றும் 66F-ன் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. மேலும், ஆபாசமான அல்லது அவதூறான கருத்துக்களைப் பகிர்வது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு, சமூக வலைதளங்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆனால், புதிய சமூக வலைதளக் கொள்கை, 2024-ன் படி, சமூக வலைதள விளம்பரங்களையும் அதன் மூலமாக வரும் வருவாயையும் நிர்வகிக்க அரசு வி-ஃபார்ம் (V-Form) என்ற ஏஜென்சியை நிறுவும். இந்த ஏஜென்சி ட்வீட்கள், பதிவுகள், வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்களை, தொடர்ந்து கண்காணிக்கும்.

மேலும், இன்ஃப்ளூயன்சர்களுக்கும், சமூக வலைதளக் கணக்குகளின் உரிமையாளர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக, அரசின் கொள்கைகளை விளம்பரப்படுத்த வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் கிரியேட்டர்கள் அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் விளம்பரப்படுத்தும் விதமாக கன்டென்ட்களை உருவாக்க வேண்டும். இதன்படி அதிகபட்சமாக 8 லட்சம் ரூபாய் வரை மாத வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறுகின்றனர்.

Influencer
இன்ஃப்ளூயன்சர் (மாதிரி புகைப்படம்)

அரசு அமைக்கும் குழு ஒன்று இன்ஃப்ளூயன்சர்களை ஃபாலோவர்கள் மற்றும் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து, நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தி, அவர்களுக்கான வருவாயை முடிவுசெய்யும்.

இதன்படி, எக்ஸ் தளத்தில் ஒரு நபர் ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பெறலாம். ஃபேஸ்புக் தளத்தில் ஒருவர் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.4 லட்சமும், இன்ஸ்டாகிராமில் ரூ.3 லட்சமும் வருமானம் ஈட்ட முடியும்.

யூடியூபில் பதிவிடப்படும் வீடியோக்களின் உள்ளடக்கத்திற்கு ஏற்ப இந்தத் தொகை மாறுபடும். சராசரி வீடியோக்களுக்கு மாதம் ரூ.8 லட்சமும், ஷார்ட்ஸ்களுக்கு ரூ.7 லட்சமும், பாட்காஸ்ட்களுக்கு ரூ.6 லட்சமும், பிற கன்டென்ட்களுக்கு ரூ.4 லட்சமும் வருவாய் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உ.பி அரசின் இந்தப் புதிய சமூக வலைதள கொள்கைகள் குறித்த உங்கள் கருத்தை, கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.