புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினால், அசாம், வடகிழக்கு மாநிலங்கள், உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா,டெல்லி ஆகிய மாநிலங்களும் பற்றி எரியும் என்று கொல்கத்தாவில் நடந்த திரிணமூல் மாணவர் அணிகூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின்மாணவர் அணி தொடங்கப்பட்ட தினம் நேற்று முன்தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், கட்சித் தலைவரும், மாநிலமுதல்வருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘மோடி பாபு! நீங்கள்உங்களது தொண்டர்கள் மூலம்மேற்கு வங்கத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மேற்கு வங்கத்தை எரித்தீர்களானால், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி ஆகிய மாநிலங்களும் பற்றி எரியும்’’ என்று ஆவேசத்துடன் பேசினார்.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா: மம்தா பானர்ஜி தனது குறைகளை மறைக்க, பொதுமக்களை தூண்டிவிட முயற்சிக்கிறார். அசாம் மாநிலத்தை மிரட்ட உங்களுக்கு எவ்வளவு தைரியம் சகோதரி? உங்கள் கோபத்தை எங்களிடம் காட்டாதீர்கள். உங்கள் அரசியல் தோல்விக்காக, நாட்டை எரிக்க முயற்சிக்க வேண்டாம்.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்: பொறுப்பற்ற வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன். இதற்காக வடகிழக்கு மற்றும் இதர மாநிலங்களிடம் மம்தா மன்னிப்பு கேட்க வேண்டும். பிரிவினை அரசியல் மூலம் வன்முறையை தூண்ட கூடாது. இது ஓர் அரசியல் தலைவருக்கு அழகல்ல.
பாஜக செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் படுகொலைக்கு 140 கோடி இந்தியர்களும் நீதி கேட்கும் வேளையில், அதற்கு முன்னுரிமை தராமல், பழிவாங்கும் நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்கிறார் மம்தா. அவரது கருத்தை அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், கவுரவ் கோகாய் ஆகியோர் ஆதரிக்கின்றனரா? அரசியல் சாசன புத்தகத்துடன் சுற்றிக்கொண்டிருக்கும் ராகுல் காந்தி இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏன்?
மேற்கு வங்க பாஜக தலைவர், மத்திய அமைச்சர் சுகந்தாமஜும்தார்: மம்தா தெரிவித்திருப்பது தேசவிரோத கருத்து. பழிவாங்கும் அரசியலை அவர் கையில் எடுத்துள்ளார். மேற்கு வங்க மக்களின் நலனை மத்தியஅரசுதான் காக்க வேண்டும்.
அரசியல் சாசனப்படி நடக்கவேண்டிய முதல்வர், பிரிவினையை தூண்டும் வகையில் பேசி ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளார். (இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் அவர் கடிதம்அனுப்பியுள்ளார்)
மம்தா மறுப்பு: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: திரிணமூல் மாணவர் அணி நிகழ்ச்சியில் நான் கூறிய கருத்துதவறான முறையில் ஊடகங்களில் பரப்பப்படுகிறது. நான் மாணவர்கள் மற்றும் அவர்களது இயக்கங்களுக்கு எதிராக பேசவில்லை. மாணவர் இயக்கத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். நான் அவர்களை அச்சுறுத்தவில்லை.
நான் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராகத்தான் பேசினேன். அவர்கள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுத்து, அராஜகத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். மத்திய அரசு ஆதரவுடன், சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராகத்தான் நான் குரல் கொடுத்தேன்.
இவ்வாறு முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.