குவாஹாட்டி: முஸ்லிம் சமூகத்தினர் திருமணம் மற்றும் விவாகரத்தை கட்டாயம் பதிவு செய்ய வகைசெய்யும் மசோதா அசாம்சட்டப்பேரவையில் நேற்றுநிறைவேறியது.
அசாம் சட்டப்பேரவையில் ‘முஸ்லிம் திருமணங்கள், விவாகரத்துகள் கட்டாயப் பதிவு மசோதா’ கடந்த செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. மாநில வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஜோகன் மோகன் இதனை அறிமுகம் செய்தார்.
இந்த மசோதா மீதான கேள்விகளுக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பதில்அளிக்கும்போது, “அசாமில் முஸ்லிம்களுக்கு காஜிக்கள் நடத்தி வைக்கும் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த திருமணப் பதிவுகள் அனைத்தும் செல்லுபடியாகும். புதிய திருமணங்கள் மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் வரும். முஸ்லிம் தனிச் சட்டத்தின் கீழ் வரும் இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் சடங்குகளில் நாங்கள் தலையிடவில்லை. இஸ்லாம் தடை செய்த திருமணங்கள் பதிவு செய்யப்படாது என்பதே எங்கள் நிலைப்பாடாகும். இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தால் குழந்தை திருமண பதிவு முற்றிலும் தடுக்கப்படும்” என்றார்.
இரு தரப்பினரின் அனுமதியின்றி நடைபெறும் திருமணம் மற்றும் குழந்தை திருமணத்தை தடுப்பதே இந்த மசோதாவின் நோக்கம் என்று அசாம் அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ஜோகன் மோகன் கூறுகையில், “இது பலதார மணத்தை தடுக்கஉதவும், திருமணமான பெண்கள் தங்கள் புகுந்த வீட்டில் வாழ்வதற்கான உரிமை, பராமரிப்புத் தொகை கோர முடியும். விதவைப் பெண்கள் பரம்பரை உரிமைகள் மற்றும் பிற சலுகைகளை பெற உதவும்” என்றார்.