கராச்சி,
பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. அதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.
சமீப காலமாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதனால் அந்த அணியை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் இப்படி தோல்விகளை சந்திப்பதற்கு உள்ளூர் கிரிக்கெட் தரமாக இல்லாததே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். எனவே அண்டை நாடான இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் தங்களுடைய உள்ளூர் கிரிக்கெட்டை முன்னேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்ததும் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை எனும் உள்ளூர் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளின் சிஸ்டங்களை பாகிஸ்தான் ஏற்கனவே காப்பி அடித்துள்ளது. இந்தியா நமக்கு அருகில் உள்ளனர். அவர்களுடைய சிஸ்டங்களையும் காப்பி செய்யுங்கள். உண்மையில் அதற்கும் உங்களுக்கு கொஞ்சம் அறிவு வேண்டும்.
தற்போதைய நிலைமையில் இந்தியா செய்வதை அப்படியே காப்பி அடியுங்கள். இந்தியாவில் விரைவில் துலீப் கோப்பை துவங்க உள்ளது. அது டி20 அல்லது ஒருநாள் தொடரா? இல்லை. அது 4 நாட்கள் கொண்ட தொடர். இந்தியா வித்தியாசமாக தங்களுடைய அடிப்படையை உருவாக்குவதில் கவனம் செலுத்துகின்றனர். அதனாலேயே அவர்கள் இந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்படுகின்றனர்” என்று கூறினார்.