கொச்சி: “தினமும் செய்தித்தாள்களை எடுத்தாலே அதில் ஏதாவது ஒரு பெண் தாக்கப்பட்டதாக செய்தி இடம்பெறுகிறது. அது ஒரு கல்லூரி மாணவியாகவோ, ஒரு குழந்தையாகவோ அல்லது நடுத்தர வயது பெண்ணாகவோ இருக்கின்றனர். இந்திய ஆண்களிடம் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை நாம் கண்டறிய வேண்டும்” என்று காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: “பெண்கள் மீதான வன்முறை தொடங்கி பல விஷயங்கள் இப்போது சமூகத்தில் வெளியே வந்துகொண்டிருக்கின்றன. இவை காலம்காலமாக நடந்துகொண்டிருந்தாலும் 2012ல் நிர்பயா துயரத்துக்கு பிறகு தான் அதிகம் பேசப்படுகின்றன. இப்போது 2024ஆம் ஆண்டிலும் கூட கொல்கத்தா மருத்துவ மாணவிக்கு இப்படி ஒரு துயரம் நடந்திருக்கிறது. 12 ஆண்டுகள் கழித்தும் கூட எதுவுமே மாறியதாக தெரியவில்லை.
தினமும் செய்தித்தாள்களை எடுத்தாலே அதில் ஏதாவது ஒரு பெண் தாக்கப்பட்டதாக செய்தி இடம்பெறுகிறது. அது ஒரு கல்லூரி மாணவியாகவோ, ஒரு குழந்தையாகவோ அல்லது நடுத்தர வயது பெண்ணாகவோ இருக்கின்றனர். இந்திய ஆண்களிடம் ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. அதை நாம் கண்டறிய வேண்டும்.
அதற்கு ஏதேனும் தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் நம்மால் தொடர்ந்து துயத்துக்கு மேல் துயரத்தை அனுமதிக்க முடியாது. அமைப்புரீதியான மாற்றம் தேவை.
நான் வலிமையான பெண்களைக் கொண்ட குடும்பத்தில் வளர்ந்தேன். எனது இரண்டு சகோதரிகளும் என் அம்மாவும் வலுவான கருத்துக்களைக் கொண்டிருந்தனர். தங்கள் சொந்த உரிமையில் செயல்படுவதற்கான சுதந்திரமான வழிகளை அவர்கள் கொண்டிருந்தனர்.
இந்தியாவில் உள்ள மற்ற துறைகளில் கேரள சினிமா துறைதான் இந்த பிரச்சினையை அம்பலப்படுத்தியுள்ளது என்பதில் எனக்கு பெருமை. இது சரியில்லை என்று கேரளா துணிச்சலுடன் எழுந்து நின்றிருக்கிறது.
பெண்களுக்கான கழிப்பறைகள், ஓய்வெடுக்கக் கூடிய இடங்கள் என அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டியது அவசியம். அது மருத்துவமனையோ அல்லது படப்பிடிப்புத் தளமோ, பெண்கள் தங்களுக்கான இடங்களில் எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும்” இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.