கொல்கத்தா: கொல்கத்தாவில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோருக்கு இடையேயான தொலைபேசி அழைப்பின் உரையாடல் கசிந்துள்ளது.
கடந்த ஆக.9-ம் தேதி 31 வயதான முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கருத்தரங்கு அறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியாது. இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உட்பட பலரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்தச் சூழலில் வியாழக்கிழமை (ஆக.29) அன்று மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் கொலை செய்யப்பட்ட மருத்துவரின் பெற்றோருக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பின் உரையாடல் கசிந்தது. இதில் மொத்தமாக மூன்று ஆடியோ கிளிப்புகள் வெளியாகி உள்ளது. 71, 46 மற்றும் 28 வினாடிகளை இந்த ஆடியோ கிளிப் கொண்டுள்ளன. இது போலி என இரண்டு தரப்பிலும் தெரிவிக்கவில்லை. சமூக வலைதளம் மற்றும் காட்சி ஊடகத்தில் இது வெளியானது.
தங்கள் மகளின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு புறப்பட்டு வரவும் என முதல் இரண்டு ஆடியோ கிளிப்பில் மருத்துவமனை தரப்பில் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. “நாங்கள் சொல்வதை கொஞ்சம் கவனியுங்கள். தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அல்லது அவர் உயிரிழந்திருக்கலாம். காவலர்கள் இங்கு உள்ளனர். நாங்கள் எல்லோரும் இங்கு உள்ளோம். விரைந்து மருத்துவமனைக்கு வாருங்கள் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்” என மூன்றாவது ஆடியோ கிளிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 9-ம் தேதி காலை 10.53 அளவில் மருத்துவமனையில் இருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தானும் தனது மனைவியும் மருத்துவமனைக்கு செல்வதற்குள் மேலும் இரண்டு அழைப்புகள் வந்ததாக கொலை செய்யப்பட்ட மருத்துவரின் தந்தை தெரிவித்திருந்தார். போலீஸ் தரப்பில் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார் என சொல்லவில்லை என்பதை இந்த ஆடியோ கிளிப் உறுதி செய்வதாக கொல்கத்தா காவல்துறையின் மத்தியப் பிரிவு துணை ஆணையர் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தங்களது மகளின் உடல் நீல நிற ஷீட்டை கொண்டு மூடப்பட்டு இருந்ததாக கொல்லப்பட்ட மருத்துவரின் பெற்றோர்கள் வியாழக்கிழமை (ஆக.29) தெரிவித்திருந்தனர். ஆனால், அவர் பச்சை மற்றும் சிவப்பு நிற ஷீட்டை தான் பயன்படுத்தி வந்தார் என அவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவரின் உடல் நீல நிற ஷீட்டை கொண்டு மூடப்பட்டு இருந்ததை துணை ஆணையர் இந்திராணி முகர்ஜி உறுதி செய்துள்ளார். மேலும், சம்பவ இடத்தில் சிவப்பு ஷீட் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள செமினார் அறையில் இருந்து மருத்துவரின் உடல் கைப்பற்றப்பட்டதாகவும். அவரது உடற்கூறு ஆய்வு முடிவுகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளதாகவும் துணை ஆணையர் இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தடயங்களை காவல் துறை அழிக்க முயன்றதாக தொடக்கம் முதலே குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.