தமிழகத்தின் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் என 700-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை இயக்கி வருகிறது. இங்கு பி.எட், எம்.எட் படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தவகையில் பி.எட், எம்.எட் படிப்புகளில் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் மற்றும் நான்-செமஸ்டர் தேர்வுகள் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 29-ம் தேதி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘கிரியேட்டிங் அன் இன்க்ளூசிவ் ஸ்கூல்’ என்ற பாடத்துக்கான தேர்வு நடைபெறுவதாக இருந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான் சம்பந்தப்பட்ட தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பல்கலையில் பணியாற்றும் சில ஊழியர்கள்தான் காரணம் என்று ஒருசிலர் குற்றச்சாட்டி வருகிறார்கள். மறுபக்கம் தனியார் கல்லூரிகளில் இருந்து வினாத்தாள் கசிந்துள்ளது என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அந்த வினாத்தாளுக்கு பதிலாக புதிய வினாத்தாள் ஆன்லைன் வாயிலாக தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டது. பிறகு தேர்வு நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த ராமகிருஷ்ணன் நீக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் கல்வித் திட்டம் மற்றும் நிர்வாகத்துறையின் தலைவராக இருந்த ராஜசேகரன் புதிய பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த உத்தரவில் 23-ம் தேதியே ராமகிருஷ்ணன் அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் பி.எட் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இன்று நடைபெறவிருந்த `படைப்புத்திறனும் உள்ளடக்க கல்வியும்’ என்ற தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வரும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதே இதுபோன்ற வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் என ஐந்து பல்கலைக்கழங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், அப் பல்கலைக்கழகங்களில் உயிர்கல்வி பயிலும் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பி.எட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதோடு, தமிழக ஆளுநரிடம் கலந்து ஆலோசித்து பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்கல்வித் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக கல்வி வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆற்றுனர் ரத்தின சபாபதி பேசுகையில், “தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் துணைவேந்தர் இல்லை. பதிவாளர், கண்ட்ரோலர் என அனைவரும் பொறுப்பாளராகவே இருக்கிறார்கள். ஆகவேதான் பணிகளில் சுணக்கம் இருக்கிறது. பதிவாளர் மாற்றம் மட்டும் போதாது. எனவே நிரந்தரமாக பணியாளர்களை நியமிக்க வேண்டும். பெரும்பாலான பி.எட் கல்லூரிகளில் ஆசிரியர்களே இல்லை. எனவே இதையெல்லாம் ஒழுங்கு படுத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து பி.எட் கல்லூரிகளும் தனி இயக்குநரகத்துக்கு கீழ் இருந்தது.
பிறகுதான் பி.எட் கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு கொடுத்தார்கள். அதிலிருந்துதான் பிரச்னைகள் தொடங்கியது. உடனடியாக பயிற்சி மையங்களுக்கு என்று தனி இயக்குநரகத்தை அமைக்க வேண்டும். முன்பு மாநிலத்தில் 20 பி.எட் கல்லூரிகள்தான் இருந்தன. ஆனால் தற்போது 700-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. எனவே இதை கட்டுப்படுத்த தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இதையெல்லாம் செய்யவில்லை என்றால் பி.எட் படிப்பு கவனிப்பாரில்லாத நிலைக்குச் சென்றுவிடும். அதேபோல் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.