சென்னை: முக்கிய குற்ற வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்வது குறித்து சென்னை காவல் ஆணையருடன், தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) தென் மண்டல இயக்குநர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தேசிய புலனாய்வு முகமையின் (NIA) தென் மண்டல இயக்குநர் சந்தோஷ் ரஸ்தோகி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில், காவல் ஆணையர் அருணை நேற்று (29 ம் தேதி) நேரில் சந்தித்து காவல்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமைக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், கலந்துரையாடினார்.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பல்வேறு பிராந்திய பிரச்சினைகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த குறிப்பிட்ட நிகழ்வுகள் குறித்து இருவரும் கலந்துரையாடினர். மேலும், இரு துறைகளுக்கிடையில் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் தடையற்ற தகவல் பரிமாற்றத்தை வளர்ப்பதன் முக்கியத்தும் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, பாதுகாப்பு சம்பந்தமான முக்கிய வழக்குகளை திறம்பட புலனாய்வு செய்ய ஏதுவாக இருதரப்பு தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.