ரோஹித் சர்மா அடுத்த சீசனில் இந்த 2 அணிகளில்தான் இருப்பார்… அடித்துச் சொல்லும் ஹர்பஜன் சிங்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகள் என்றுதான் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டும் மட்டும்தான். மொத்தம் நடந்த 17 சீசன்களில் இரு அணிகளும் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணி 2013ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை அசைக்க முடியாத அணியாக இருந்தது. இந்த காலகட்டத்தில்தான் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 5 முறை கோப்பையை வென்றது. 

மும்பை அணிக்கு ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் மட்டுமின்றி ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், பொல்லார்ட், சூர்யகுமார் யாதவ் தற்போது ஹர்திக் பாண்டியா என பலரும் கேப்டன்ஸி செய்திருந்தாலும் ரோஹித் சர்மா ஒருவரே இந்த 5 கோப்பைகளையும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வென்று கொடுத்தவர் ஆவார். 2021ஆம் ஆண்டில் இருந்து 2023ஆம் ஆண்டுவரையில் ஒருமுறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வந்தது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரோஹித் சர்மா 

மூன்று ஆண்டுகள் கோப்பை இல்லாததாலும், ரோஹித் பேட்டிங்கில் (Rohit Sharma) பெரியளவில் சோபிக்காததாலும் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியில் டிரேட் செய்து பெற்று அவருக்கு கேப்டன்ஸி பொறுப்பை கொடுத்தது. ரோஹித்திடம் இருந்து திடீரென கேப்டன்ஸியை பறிப்பார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இது பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் அணியிலும் இதனால் பதற்றம் நிலவியது. கடந்த 2024 சீசனில் மும்பை அணி 10ஆவது இடத்தில்தான் நிறைவும் செய்தது.

இந்த பிரச்னைகள் இருப்பதால் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை (IPL 2025 Mega Auction) முன்னிட்டு ரோஹித் சர்மா வேறு அணிக்கு டிரேட் செய்யப்படுவார் அல்லது மும்பை அணியால் விடுவிக்கப்பட்டு ஏலத்திற்கு வருவார் என தகவல்கள் வெளியாகின. மேலும் அவருக்கு வேறு பல அணிகளில் இருந்து கேப்டன்ஸி ஆப்பரும் வந்ததாக தகவல்கள் வெளியாகின. ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறி ஏலத்திற்கு வருவாரா அல்லது மற்ற அணிகளுக்குச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த 2 அணிகள்…

அந்த வகையில், ஹர்பஜன் சிங் அடுத்த சீசனில் ரோஹித் சர்மா எந்த அணிக்காக விளையாடுவார் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,”இந்த வருடம் ஐபிஎல் மெகா ஏலம் மிகுந்த பரபரப்பில்தான் நடக்கும். இதில் பெரிய வீரர்களின் பெயர்களும் அடிபடுகிறது, எனவே, அவர்கள் ஐபிஎல் ஏலத்தில் என்ன செய்ய காத்திருக்கிறார்கள் என்பதும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும். ரோஹித் சர்மா டெல்லிக்கு போவார் அல்லது மும்பை அணி அவரை தக்கவைக்கும் . காத்திருந்திருந்து பார்ப்போம்” என்றார்.

இம்பாக்ட் பிளேயர் விதி இருக்குமா இருக்காதா?

ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி பெரும் பூகம்பத்தை கிளப்பி உள்ளது. 2023, 2024 சீசன்களில் இந்த விதி இருந்தாலும் அடுத்த சீசனில் இந்த விதி தூக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கடந்த காலங்களில் இம்பாக்ட் பிளேயர் விதிகள் குறித்து தங்களின் அதிருப்தியை தெரிவித்திருந்தனர். 

மறுபுறம் ரவிசந்திரன் அஸ்வின் மற்றும் ஜாகிர் கான் ஆகியோர் இந்த விதிக்கு ஆதரவு நிலைப்பாட்டையும் தெரிவித்திருந்தனர். அடுத்த சீசனில் (IPL 2025) இம்பாக்ட் பிளேயர் விதி அப்படியே இருக்குமா, அல்லது நீக்கப்படுமா அல்லது விதிகளில் மாற்றம் வருமா என்பதை ஐபிஎல் கமிட்டியே உறுதிசெய்யும். எனவே இதில் ஐபிஎல் கமிட்டி என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. 

இந்த விதி குறித்து ஹர்பஜன் சிங்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், இந்த விதி குறித்து தனக்கு தனிப்பட்ட கருத்துகள் ஏதுமில்லை என்றும் ஆனால் டி20 கிரிக்கெட்டில் இலக்கு 160 ரன்களாக இருந்த காலகட்டத்திற்கு நாம் மீண்டும் செல்ல வேண்டும் என நினைக்கிறேன் எனவும் பதிலளித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.