Jasprit Bumrah: `நீங்கள் பந்துவீசுவதற்கு கடினமான பேட்ஸ்மேன் யார்?' – சென்னையில் மனம் திறந்த பும்ரா!

கிரிக்கெட் உலகில் இந்த தசாப்தத்தின் மிகச்சிறந்த பவுலராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வலம்வருகிறார். குறிப்பாக இந்தியாவில் காலம் காலமாக இருக்கும் பேட்ஸ்மேன் துதிபாடலில் இன்று விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு நடுவே தவிர்க்க முடியாத பந்துவீச்சாளராக உச்சி முகரப்படுகிறார் பும்ரா. கடந்த 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பைத் தொடரில் பும்ராவுக்கு எதிராக ரன் அடிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை, விக்கெட்டை இழந்துவிடக் கூடாது என்று பிற நாடுகளின் சிறந்த பேட்ஸ்மேன்களும் நிதானமாக ஆடி விக்கெட் பறிகொடுத்ததை உலக ரசிகர்கள் அனைவரும் கண்கூடாகப் பார்த்தனர்.

பும்ரா

குறிப்பாக, 20 ஓவர் உலக கோப்பைத் தொடரின் இறுதியாட்டத்தில் எதிரணிக்கே வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தபோது, தனது பந்துவீச்சால் அதை சுக்குநூறாக்கி, ஒரு தசாப்தத்துக்குப் பிறகு ஐ.சி.சி கோப்பையை இந்தியா வசமாக்கினார். இவ்வாறு பேட்ஸ்மேன்களுக்கு கடினமான பவுலராகத் திகழும் இவருக்கு கடினமான பேட்ஸ்மேன் யாரவது இருக்கிறாரா என்ற கேள்விக்கு நச்சென பதிலளித்திருக்கிறார் பும்ரா. சமீபத்தில் சென்னையில் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பும்ராவிடம், `நீங்கள் பந்துவீசுவதற்குக் கடினமான பேட்ஸ்மேன் யாரவது இருக்கிறாரா?’ என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அப்போது மனம் திறந்த பும்ரா, “இதற்கு நல்ல பதிலைக் கொடுக்கவே விரும்புகிறேன். ஆனால், உண்மை என்னவென்றால் எந்த பேட்ஸ்மேனையும் என் தலைக்கேற்றுவதில்லை நான். எல்லா பேட்ஸ்மேன்களையும் நான் மதிக்கிறேன், அதேசமயம் என் வேலையை நான் நன்றாகச் செய்தால், உலகில் யாரும் என்னைத் தடுக்க முடியாது. எனவே, என்னைப் பற்றியே நான் சிந்திக்கிறேன். நான் கன்ட்ரோலாக செயல்பட்டு, என்னுடைய சிறப்பை வெளிப்படுத்தினால் மற்றை அனைத்தையும் அதுவே பார்த்துக்கொள்ளும்” என்றார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.