விஜயவாடா: ஆந்திரப்பிரதேசத்தில் கனமழை மிக கனமழையாக தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஸ்டெல்லா, “ஆந்திரப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை, மிக கனமழையாக தொடரும். வடக்கு ஆந்திர கடற்கரையை ஒட்டிய மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (சனிக்கிழமை) வலுவடைந்துள்ளது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, சனிக்கிழமை நள்ளிரவில் கலிங்கப்பட்டினத்திற்கு அருகில், விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூருக்கு இடையே வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.” என தெரிவித்துள்ளார்.
ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் வழியாகச் செல்லும் ஆறுகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆறுகள் மற்றும் அவற்றின் துணை நதிகள் உட்பட அனைத்து ஆறுகளிலும் நீட் மட்டம் உயரும் என்றும், நாகாவலி, வம்சதாரா, சுவர்ணமுகி, சம்பவவதி, கோஸ்தானி, சாரதா, வராஹா, சபரி, தம்மிலேறு, ஏலேறு ஆகிய ஆறுகளிலும் நீர்மட்டம் உயரும் என்றும் மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா வழியாக பாயும் ஆறுகளுக்கும் இதேபோன்ற எச்சரிக்கையை மத்திய நீர் ஆணையம் விடுத்துள்ளது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் கடல் சீற்றமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், வடக்கு ஆந்திரா கடற்கரையில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறியுள்ளது.
ஆந்திர அரசு வளர்ச்சி திட்ட அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் NTR மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,639.6 மிமீ மழை பதிவாகியுள்ளது.