மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் வைத்து அந்த அணியை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரில் இந்தியா வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.
இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவதற்காக பும்ராவுக்கு தற்போது முழுமையான ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். எனவே அடுத்த ஆஸ்திரேலிய தொடரில் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோரை கொண்ட வலுவான வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்க உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா போன்ற ஸ்விங் மற்றும் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலைகளில் பும்ராவை விட சிராஜ் மிகவும் ஆபத்தான பவுலர் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- “நீங்கள் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடும்போது பெரும்பாலும் உங்களுக்கு ஆதரவு கொடுக்காத பிட்ச்களில் பந்து வீசுவீர்கள். அங்கே நீங்கள் கொஞ்சம் தந்திரத்துடன் வெளியே வர வேண்டும் அல்லது நம் நாட்டில் நிலவும் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் எப்படி மாற்றி பந்து வீச வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் சிராஜ் மற்றும் ஷமிக்கு பெரிதும் உதவியது என்று நினைக்கிறேன். அதனாலேயே பந்து ரிவர்ஸ் ஆகும்போது சிராஜ் உலக கிரிக்கெட்டிலேயே மிகவும் ஆபத்தான பந்து வீச்சார்களில் ஒருவராக இருக்கிறார்” என்று கூறினார்.