வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்து பொன்னையாற்றின் குறுக்கேயுள்ள சித்தூர் – திருத்தணி நெடுஞ்சாலையில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, “என்னைப் போற்றுகிறவர்களும், திட்டுகிறவர்களும் இந்த பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். நல்லவர்களும், வல்லவர்களும்கூட இதில்தான் பயணிக்க வேண்டும்.
அனைவரையும் இந்த பாலம் சுமப்பதைபோல நான் தாங்கிக் கொண்டிருக்கிறேன். என் மக்கள் 50 வருடம் என்னை இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக வைத்திருக்கிறார்கள். என்னுடைய தொகுதி தான் எனக்கான `திருக்கோயில்’. நீங்கள் தான் எனது `குலதெய்வம்’. நீங்கள் தான் எனது வழிபாட்டுக்குரியவர்கள்.
இந்த பொன்னையாற்றுப் பாலம் நான் இல்லாவிட்டாலும் அடுத்த 100 ஆண்டுகளுக்குப் பிறகும் `இது துரைமுருகன் கட்டிக்கொடுத்த பாலம்’ எனப் பெயர் சொல்லும். உயிர் உள்ளவரை உங்களுக்கு அடிமையாக இருப்பேன். என் உயிர் பிரிகிறபோதுகூட `என் தொகுதி காட்பாடி’ என பெயரைச் சொல்லிக்கொண்டுதான் போகும். எப்போதும் இந்த காட்பாடி தொகுதிக்கு சேவகனாக இருப்பேன்’’ என்றார் நெகிழ்ச்சியோடு.
இதையடுத்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு “இந்த பாலத்துக்கு `தளபதி மு.க.ஸ்டாலின்’ என பெயர் வைத்தால் மிகப் பொருத்தமானதாகவும், நன்றிக்கடனாகவும் இருக்கும். முதல்வர் ஸ்டாலினிடம் கலந்தாலோசிக்காமல் நானும், அண்ணன் துரைமுருகனும் சேர்ந்து பொன்னை உயர்மட்ட பாலத்துக்கு `தளபதி ஸ்டாலின்’ என பெயர் சூட்டுகிறோம்’’ என்றார்.