காசாவில் 3 நாள் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல்

பாலஸ்தீனத்தின் காசா முனை ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டுவோம் என்ற சூளுரையுடன் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்புக்கும் இடையே, நீடித்து வரும் இந்த சண்டையில் இது வரை குழந்தைகள், பெண்கள் உள்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வந்தாலும் இஸ்ரேல் அதை கண்டு கொள்ளவில்லை. காசாவில் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் உயிருக்கு பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் சரிவர கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சுகாதார வசதிகள் இல்லாதததால் காலரா உள்ளிட்ட நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் காசாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு நிவாரண முகாமில் தங்கி உள்ள ஒரு குழந்தைக்கு போலியோ நோய் தாக்கியது கண்டறியப்பட்டு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து போலியோ மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் படி முதல் கட்டமாக மத்திய காசாவில் முகாம்களில் தங்கி இருக்கும் 10 வயதுக்கு உட்பட்ட சுமார் 6 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

இதற்காக மனிதாபிமான அடிப்படையில் 3 நாட்கள் தற்காலிகமாக காசாவில் சில பகுதிகளில் போரை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. நாளை முதல் 3 நாட்கள் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட இருக்கிறது. தேவைப்பட்டால் கூடுதல் நாளை ஒதுக்கவும் இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.இதன் தொடர்ச்சியாக வடக்கு காசா பகுதிகளிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.