பெங்களூரு: கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைத்தளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமியை கொலை செய்த வழக்கில் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டார். அவருடன் கைதான பவித்ரா கவுடா, மேலாளர் நாகராஜ் உட்பட 17 பேர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தர்ஷன் சிறையில்தேநீர் கோப்பையுடன் சிகரெட் புகைத்தவாறு நண்பர்களுடன் சகஜமாக பேசிக் கொண்டிருக்கும் புகைப்படமும், செல்போனில் பேசுவது போன்ற வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தர்ஷன் உள்ளிட்ட 4 பேர் மீது 3 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், சிறைத்துறையை சேர்ந்த 9 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளை பெங்களூருவில் இருந்துவேறு சிறைக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து தர்ஷன் பெங்களூரு சிறையில் இருந்து பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
பகலில் அவரை அழைத்துச் சென்றால் ரசிகர்கள் இடையூறு இருக்கும் என்பதால், நேற்று முன் தினம் அதிகாலை 5 மணிக்கே தர்ஷனை போலீஸ் வேனில் அழைத்துச் சென்றனர்.
இதே போல தர்ஷனுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ரவுடி வில்சன் கார்டன் நாகா, குள்ளா சீனா, மேலாளர் சீனிவாஸ் ஆகிய மூவரையும் மைசூரு சிறைக்கு போலீஸார் மாற்றினர்.