புதுடெல்லி: பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக ஏற்கெனவே வலுவான சட்டங்களும், கடுமையான தண்டனைகளும் உள்ளன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு குற்றவாளிகளுக்கான தண்டனை சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் கடிதம் எழுதியிருந்த நிலையில் அதற்கு இவ்வாறு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக மம்தாவுக்கு மத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அன்னபூர்னா தேவி கடிதம் எழுதியுள்ளார். அதன் பிரதியை அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் அமைச்சர் அன்னபூர்னா தேவி கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை, போக்ஸோ தொடர்பான 48.600 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மாநிலத்தில் உள்ள பாலியல் வன்கொடுமை குற்றங்கள். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை (போக்ஸோ வழக்குகளை) விசாரிக்கக் கூடிய 11 கூடுதல் விரைவு சிறப்பு நீதிமன்றங்களும் முழுவீச்சில் இயங்கவில்லை. நிலைமை இப்படியிருக்க நேற்றைய கடிதத்தில் மம்தா இது தொடர்பான புள்ளிவிவரத்தை தவறாகக் குறிப்பிட்டுள்ளார். விரைவு நீதிமன்றங்கள் விவகாரத்தை மூடிமறைக்கவே மம்தா இவ்வாறாகக் கடிதம் எழுதியுள்ளார். பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக ஏற்கெனவே வலுவான சட்டங்களும், கடுமையன தண்டனைகளும் உள்ளன. அவற்றை ஏன் மம்தா பானர்ஜி மாநிலத்தில் முழு வீச்சில் அமல்படுத்தவில்லை. இவ்வாறு அமைச்சர் அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மேற்கு வங்க மாநில பாஜக இணை பொறுப்பாளரான அமித் மாளவியா தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “பெண்களையும், பெண் குழந்தைகளையும் பாதுகாக்க ஏற்கெனவே அமலில் உள்ள கடுமையான சட்டங்களை ஏன் மேற்கு வங்க மாநில அரசு பயன்படுத்தவில்லை. கடிதங்கள் எழுதுவதற்குப் பதிலாக எங்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். உங்களுக்கு அந்தப் பொறுப்பு இருக்கிறது மம்தா பானர்ஜி” என்று பதிவிட்டுள்ளார்.
2வது கடிதத்தின் விவரம்: முன்னதாக நேற்று மம்தா எழுதியிருந்த கடிதத்தில், “பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான முக்கிய பிரச்சினை குறித்த எனது கடிதத்துக்கு நீங்கள் பதில் அனுப்பாதது ஏன்? அதேநேரத்தில், கடிதம் கிடைத்துள்ளதாக மத்திய மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் எனக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் சட்டத்தில் மேற்கு வங்க அரசு திருத்தம் செய்ய உள்ளது. இது அடுத்த வாரம் மேற்கு வங்க சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். இதன்மூலம் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும்.
அதைப் போலவே, பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் மத்திய சட்டத்தை, பாஜக தலைமையிலான அரசு கொண்டு வரவேண்டும்.
மாநில அரசு நிதியில் மேற்குவங்கத்தில் 88 விரைவு சிறப்பு நீதிமன்றங்களும், 62 போக்சோவழக்கு தொடர்பான நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன. ஆனால் இந்த நீதிமன்றங்கள் இயங்கவே இல்லை எனமத்திய மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அன்னபூர்னா தேவி தெரிவித்துள்ளார். இது சரியல்ல” என்று குறிப்பிட்டிருந்தார்.