ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முன்னாள் தலைவருமான சம்பய் சோரன் நேற்று பாஜகவில் இணைந்தார்.
மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவர் பாபுலால் மராண்டி ஆகியோர் முன்னிலையில், நேற்றுராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது அவர் பாஜகவில் இணைந்தார். பழங்குடி மக்களின் செல்வாக்கு பெற்ற சம்பய் சோரன் பாஜகவில் இணைந்தது ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அதேசமயம், அவரது இணைவு ஜார்க்கண்டில் தங்களை வலுப்படுத்திக் கொள்ளபாஜவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
தற்போது ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.கடந்த ஜனவரில், ஊழல் வழக்கில்ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இதைத்தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சியின் மூத்த தலைவரான சம்பய் சோரனை முதல்வராக நியமித்தார்.
கடந்த ஜூலை மாதம் ஹேமந்த் சோரன் ஜாமீனில் வெளிவந்தார். இதையடுத்து சம்பய் சோரன் முதல்வர் பதவியிலிருந்து விலகிய நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார்.
இதனால், கட்சி மீது சம்பய் சோரனுக்கு அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், சிலதினங்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து பாஜகவில் இணையப்போவதாக அவர் கூறிவந்த நிலையில், நேற்று அதிகாரப்பூர்வமாக அக்கட்சியில் இணைந்துள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகியது குறித்து அதன் தலைவர் சிபு சோரனுக்கு சம்பய் சோரன் எழுதிய கடிதத்தில், “என் குடும்பமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை கருதி வந்தேன். அக்கட்சியிலிருந்து விலகுவேன் என்று கனவில் கூட நான்நினைத்ததில்லை. ஆனால், கட்சியின் சமீபத்திய செயல்பாடுகளும் சில நிகழ்வுகளும் என்னை இந்த முடிவை நோக்கி தள்ளியுள்ளன. கட்சி அதன் கொள்கையிலிருந்து விலகிவிட்டது. மிகுந்த வலியுடனே கட்சியிலிருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சம்பய் சோரனுடன் அவரதுஆதரவாளர்களும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளனர்.