TRAI’s New Rule To Curb Spam Calls: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வியாபார நோக்கில் செய்யப்படும் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு முடிவு கட்ட புதிய விதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மோசடி அல்லது ஸ்பேம் அழைப்புகளை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று TRAI (Telecom Regulatory Authority of India) எச்சரித்துள்ளது. புதிய விதிகளின் நோக்கம் மொபைல் பயனர்களை தினமும் தொல்லைக்கு உள்ளாக்கும் ஸ்பேன் கால்களில் இருந்து பாதுகாப்பதாகும்.
புதிய விதியின் மூலம் மக்களுக்கு பெரும் பிரச்சனையை கொடுக்கும் ஸ்பேம் அழைப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 இலக்க தனிப்பட்ட எண்களில் இருந்து ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பும் டெலிமார்க்கெட்டர்களைக் கட்டுப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். TRAI சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் ஒரு நாளில் 50க்கும் மேற்பட்ட அழைப்புகள் அல்லது செய்திகளை அனுப்பும் பயனர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் நெட்வொர்க்கில் இருந்து மேற்கொள்ளப்படும் ஸ்பேம் அழைப்புகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர் ஸ்பேம் அழைப்புகள் பெற்றது குறித்து புகார் அளித்தால், தொலைத்தொடர்பு நிறுவனம் சிக்கலைத் தீர்த்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் TRAI கூறியுள்ளது.
சந்தேகத்திற்கிடமான சிம் கார்டுகளை அடையாளம் காணுதல்
ஜனவரி மற்றும் மார்ச் 2024 க்கு இடையில், தினமும் 50 முதல் 1000 அழைப்புகள் மற்றும் செய்திகள் அனுப்பும், 14 லட்சம் சிம் கார்டுகளை டிராய் கண்டறிந்துள்ளது. இந்த சிம் கார்டுகளில் ஸ்பேம் கால்களை மேற்கொள்ள பயன்படுத்தப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, 4 லட்சம் சிம் கார்டுகளில் இருந்து தினமும் 50க்கும் மேற்பட்ட செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. 2022-23 ஆம் ஆண்டில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சுமார் 59,000 மொபைல் எண்களை முடக்கியுள்ளன. ஆனால் புதிய சிம் கார்டுகளைப் பயன்படுத்தி தங்கள் செயல்பாடுகளைத் பலர் தொடர்கின்றனர்.
வெவ்வேறு கட்டணத் திட்டங்கள் தேவை
தற்போது, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கான திட்டங்களை வழங்குகின்றன. அவை சாதாரண பயனருக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், வர்த்தக நோக்கில் செயகல்படும் பலர் அதிக எண்ணிக்கையிலான ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்ப இந்தத் திட்டங்களைப் பயன்படுத்துகின்றனர். அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு வெவ்வேறு கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், வணிகத்திற்காக இந்தச் சேவையைத் தவறாகப் பயன்படுத்துபவர்களை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நம்புகிறது.
மக்கள் கருத்தை கோரும் TRAI
குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு தனி கட்டணத் திட்டங்களை அமல்படுத்த வேண்டுமா என்பது குறித்து TRAI பொது மக்களின் கருத்தை கேட்டுள்ளது. பரிந்துரைகளை வழங்குவதற்கான கடைசி தேதி அக்டோபர் 9 ஆகும். இந்த நடவடிக்கை, மொபைல் பயனர்களின் அனுபவத்தை பாதுகாப்பானதாகவும், எரிச்சலை குறைக்கும் வகையிலும், தொலைத்தொடர்பு சேவைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உதவும்.
TRAI வெளியிட்டுள்ள அறிக்கை மற்றும் பரிந்துரைகள்
வர்த்தக நோக்கில், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் பேக் மூலம் பல சிம் கார்டுகளில் இருந்து விளம்பர அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்புவதாக TRAI அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை 78,703 மொபைல் எண்களை அடையாளம் கண்டுள்ளது.