ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக பகுதியாக உள்ளது. இங்கு நேற்று மாலை இறங்குபொழுதில் 5-க்கும் மேற்பட்ட யானைகள் மலைஉச்சியிலிருந்து கீழிறங்கி வந்துள்ளன. மலையடிவாரம் நோக்கிவந்த யானைகள், இரவு வரை வனப்பகுதிக்குள் சுற்றிவிட்டு நள்ளிரவில் மலையடிவார தோப்புக்குள் நுழைந்து ஸ்ரீவில்லிபுத்தூர்-செண்பகத்தோப்பு சாலைக்கு வந்து நின்றுள்ளது.
மலையிலிருந்து யானைகள் கீழிறங்கியது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி, ரேஞ்சர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் டிரோன்கள் உதவியுடன் யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து விடிய, விடிய யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் பேசுகையில், ‘ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியை பொருத்தவரை கடந்த ஒருமாதமாகவே யானைகள் நடமாட்டம் அதிக அளவு உள்ளது. வனத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் கூட்டமாக வரும் யானைகள் மலையடிவாரப்பகுதியில் விவசாயநிலங்களுக்குள் புகுந்து சிறு, சிறு சேதங்களை ஏற்படுத்தி வந்தன. இந்தநிலையில் கடந்த இரு தினங்களாக இரவு 9 மணிக்குமேல் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு சாலையில் யானைகள் இறங்கி நிற்பதாக தகவல் கிடைத்தது.

அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவின்பேரில், யானைகள் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தோம். அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு மேல் வனப்பகுதியிலிருந்து கீழிறங்கி வந்த யானைகள், பொதுமக்கள் போக்குவரத்து உள்ள சாலையில் வந்து நின்றன.
இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், ட்ரோன் உதவியுடன் யானை விரட்டும் பணியில் இரவு முழுவதும் ஈடுபட்டனர். அதன்பொருட்டு, செண்பகத்தோப்பு, மம்சாபுரத்தை சேர்ந்த விவசாயிகள், தங்களின் விவசாய நிலங்களில் செய்து முடிக்கவேண்டிய பணிகளை பகல் பொழுதிலேயே முடிக்க வேண்டும் என வனத்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இரவு நேரங்களில், யானைகள் கூட்டமாக செண்பகத்தோப்பு – மம்சாபுரம் சாலையில் இறங்குவதால் பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் சாலை போக்குவரத்தை தவிர்க்க கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ட்ரோன்களை பறக்க விட்டு தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தை வனத்துறை கண்காணித்து வருகிறது. யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறை அவ்வபோது தரும் அறிவிப்புகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்றனர்.