’96’ பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் ‘மெய்யழகன்’.
இப்படத்தில் கார்த்தியுடன், அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட பாடலாசிரியர் கார்த்தி நேத்தா, “பத்தாம் வகுப்பு படிக்கும் போதே குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தேன். கண்ணதாசனின் ‘கண்ணே கலைமானே’ பாடலைக் கேட்டு, சினிமா பாடலாசிரியர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ’96’ படத்தின்போது இயக்குநர் பிரேம் என்னை மறுவாழ்வு மையத்தில் தேடி வந்து, நான் தான் பாடல் எழுத வேண்டும் என்று சொல்லி என்னைக் கூட்டிச் சென்று ‘Life of Ram’ மற்றும் ‘காதலே காதலே’ பாடல்களை எழுத வைத்தார். ’96’ என் வாழ்க்கையை மாற்றிய படம்.” எனப் பேசியிருக்கிறார்.
இவரை தொடர்ந்து வந்து பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “`கங்குவா’ தமிழ் சினிமா மட்டும் இல்லாம இந்திய சினிமாவே பெருமைப்படுற படமா வந்திருக்கு. ரசிகர்களோட ரசிகனா நானும் மிகப்பெரிய எதிர்பார்ப்போட காத்திருக்கேன். கண்டிப்பா சீக்கிரம் அப்டேட் வரும். அதுவரை காத்திருங்கள்!” எனக் கூறியிருக்கிறார்
இயக்குநர் பிரேம் குமார் , “என்னோட முதல் இசை வெளியீட்டு விழா இது. கோவைக்கும் எனக்கும் தொடர்பு இருக்கு. இந்த ஊர்லதான் நான் காலேஜ் படிச்சேன். என்னுடைய பேராசிரியர் ஒருவர்தான் என்னோட ஒரு புகைப்படத்தை ஜூனியர் விகடன்ல வர வச்சாரு. அங்க இருந்துதான் என்னுடைய பயணம் தொடங்குச்சு. ’96’ போலவே இந்த படமும் அன்பை பேசும்.” எனப் பேசினார்.