நடிகர்கள், இயக்குநர்கள் என சினிமா பிரபலங்கள் பலரும் திரைத்துறையைத் தாண்டி பிசினஸிலும் சமீப காலமாக அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஹோட்டல் பிசினஸ், ஆடை பிசினஸ் எனப் பல துறைகளில் களமிறங்கி சக்சஸ் மீட்டரையும் அவர்கள் எட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இயக்குநர் அட்லீயின் மனைவியும் நடிகையுமான ப்ரியா அட்லீ புதிய பிசினஸ் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.
ப்ரியா அட்லீ விஜய் டி.வியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ சீரியலில் நடித்துப் பெரிதளவில் பரிச்சயமானார். அதன் பிறகு ‘சிங்கம்’ திரைப்படத்தில் நடித்தவர், அட்லீ இயக்கிய ஒரு குறும்படத்திலும் நடித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு சினிவாவிலிருந்து விலகியிருந்தவர், சமீப காலமாக அட்லீயுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவும் செய்து வருகிறார். அட்லீயுடன் இணைந்து ‘ஏ ஃபார் ஆப்பிள் (A for apple)’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அர்ஜூன் தாஸ் நடித்திருந்த ‘அந்தகாரம்’ திரைப்படத்தைத் தயாரித்தார். அடுத்ததாக வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகிற ‘பேபி ஜான்’ என்ற பாலிவுட் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படியான வேலைகளை சினிமாவில் கவனித்து வந்தவர், தற்போது பிசினஸ் பக்கம் ஆர்வத்துடனும் துடிப்புடனும் களமிறங்கியிருக்கிறார்.
‘ரெட் நாட்( Red Knot)’ என்ற பெயரில் புதிய ஆடை பிசினஸைதான் தற்போது இவர் தொடங்கியிருக்கிறார். இவருடைய பிராண்ட் ஆடைகள் விற்பனை செய்யப்படும் இணையதளத்தையும் அறிமுகம் செய்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “இந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது மிகவும் கடினமான விஷயம். என்னுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமான இந்த ‘ரெட் நாட் ஆடை பிராண்ட்’ என்பது என்னுடைய கனவு.” எனப் பதிவிட்டிருக்கிறார். ப்ரியா அட்லீயின் இந்த பிசினஸ் தொடக்கத்துக்குப் பலரும் சமூக வலைத்தளப் பக்கங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில்கூட நடிகை நயன்தாரா ‘9ஸ்கின்’ என்ற ஸ்கின்கேர் பிராண்ட் ஒன்றைத் தொடங்கினார். இதுமட்டுமின்றி, ‘ஃபெமி 9’ என்ற நாப்கின் பிரான்ட் ஒன்றையும் தொடங்கினார். நடிகை கீர்த்தி சுரேஷ் ‘கூக்டு (Cookd)’ செயலியில் முதலீடு செய்திருக்கிறார். இதுமட்டுமின்றி ஆர்யா, சூரி உட்படப் பல நடிகர், நடிகைகள் ஹோட்டல் பிசினஸிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.