சென்னை: தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தமிழகம் போராட்டக்களமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழக அரசுக்கு கார் பந்தயத்தில் மட்டுமே கவனம் இருக்கிறது என பாஜக குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் முக்கிய மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் கண் முன்னே விஸ்வரூபமெடுத்து நின்று கொண்டிருக்கிறது. ஆனால், அமைச்சர் உதயநிதிக்கு கண் முன்னே இருக்கும் ஒரே பிரச்சினை ஃபார்முலா 4 கார் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்துவது ஒன்றுதான். தமிழகம் போராட்டக்களமாக மாறிக் கொண்டிருக்கிறது. டாக்டர்கள் முதல் நடிகர்கள் வரை அனைத்து துறையை சேர்ந்த ஊழியர்களும் தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி செயல்படாமல் ஏமாற்றும் திமுக அரசை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 10-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்றும் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அறிவித்துள்ள தனியார்மயமாக்கல், வரி உயர்வு, மாநகராட்சி பள்ளிகள் மூடல் மற்றும் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதார கோரிக்கைகளுக்காக பலரும் போராடி வருகிறார்கள். நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.
இத்தனை போராட்டங்களும், மக்கள் பிரச்சினைகளும் இந்த சென்னையை பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு சென்னையின் வீதிகளில், அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் பாதைகளில், ஏழை மக்கள் பயன்பெறும் இரண்டு பெரும் அரசு மருத்துவமனைகள் அமைந்திருக்கும் பகுதியில் ஃபார்முலா கார் ரேஸ் நடத்துவது ஒன்றே குறிக்கோள். தமிழக மக்கள், தங்களின் நலனை கருத்தில் கொள்ளாத இந்த மக்கள் விரோத திமுக அரசுக்கு விரைவில் விடையளிப்பார்கள்.
இனியாவது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, தமிழக விளையாட்டு துறையில், மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவித்து, தேசிய போட்டிகளில் சாதனை படைத்து, உலகம் போற்றும் விளையாட்டு வீரர்களை தமிழகத்தில் இருந்து உருவாக்கும் வகையில் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.