ஹைதராபாத்: தெலங்கானாவில் கனமழை பெய்துவரும் நிலையில் மாநிலத்தில் இன்று (செப்.1) 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கையின்படி, வடமேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 12.30 முதல் 2.30 மணிக்குள் வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில், கலிங்கபட்டினத்துக்கு அருகே கரையை கடந்தது. இது மேலும் வடமேற்கில் நகர்ந்து வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா, சத்தீஸ்கர், தெலங்கானா ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நிலை கொண்டிருக்கும். இதனால் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, சத்தீஸ்கரில் தொடர் மழை பெய்து வருகிறது.
தெலங்கானாவில் முடங்கிய இயல்பு வாழ்க்கை: தெலங்கானாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மாநிலத்தில் 9 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட், 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அடிலாபாத், நிர்மல், நிஜாமாபாத், கம்மாரெட்டி, மஹபூப்நகர், நாகர்குர்னூல், வனபர்தி, நாராயன்பேட், ஜோகுலம்பா, கட்வால் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. 24 மணி நேரத்திற்கு 204.5 மில்லி மீட்டர் அல்லது அதற்கு அதிகமான அளவில் பெய்யும் மழை சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழையினை மிகமிகக் கனமழை என்கின்றனர். இம்மழையினால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும் என்பதே பொருள்.
தொடர் மழை காரணமாக ஹைதராபாத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றைக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது மிதமானது முதல் கனமழை பெய்யும். இடி, பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது. கம்மம் மாவட்டத்தில் இன்று (செப்.1) காலை 8 மணி நிலவரப்படி 52.1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வாரங்கல் மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மஹபூபாபாத்தில் நிலைமை மோசமாகவே உள்ளது. அங்கே அக்கேரு வாகு ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் பெருக்கெடுத்த வெள்ள நீரில் தந்தை, மகள் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனமழையை ஒட்டி முதல்வர் ரேவந்த் ரெட்டி மாவட்ட வருவாய் அலுவலர்கள், நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள், பிற துறை உயர் அதிகாரிகளை மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு ஆயத்தமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலரை தொடர்பு கொண்ட முதல்வர் ரேவந்த், வருவாய்த் துறை, மின்சாரம், சுகாதாரத் துறை அதிகாரிகளை முழுவீச்சில் செயல்பட உத்தரவிட வலியுறுத்தியுள்ளார்.
ஆந்திராவில் வெள்ளம், நிலச்சரிவு: ஆந்திராவில் பெய்துவரும் கனமழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஐந்து பேர் விஜயவாடாவின் மொகல்ராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர்.
பல தாழ்வான பகுதிகளிலும் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை 80 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் சந்திரபாபு நாயுடு மழை நிலவரம் பற்றி தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உடனடியாக ரூ.3 கோடியை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
12 ரயில் சேவை பாதிப்பு: கனமழை காரணமாக விஜயவாடா – வாரங்கல் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விஜயவாடா – கம்மம் பாதையில் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. மகபூபாத் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டலபுசலபல்லி அருகே தண்டவாளம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. கேசமுத்ரம் ரயில் நிலையத்திலும் இதே நிலைதான் நிலவுகிறது. ரயில் ரத்து, மாற்றுப் பாதையில் இயக்கப்படுவது குறித்த தகவல்களை அறிய 044 – 25354995, 044 – 25354151 ஆகிய தொடர்பு எண்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பல பகுதிகளிலும் சாலைகளில் நீர் சூழ்ந்துள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெள்ளப் பெருக்கு நிலவும் என்று மத்திய நீர் ஆணயம் ( Central Water Commission ) எச்சரித்துள்ளது.