அனந்த்நாக்: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, 2 இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் அகமது மிர் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் வரும் 4-ம் தேதி தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி உரையாற்றுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் பங்கேற்க வேண்டும் என்பது மக்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் விருப்பம். அதனால் ராகுல் காந்தி காஷ்மீருக்கு 4-ம் தேதி வருகிறார். தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார்.
தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள தூரு பகுதியில் உள்ள அரங்கத்தில் அவர் உரையாற்றுகிறார். ஜம்முவில் சங்கல்தான் என்ற இடத்தில் அவர் உரையாற்றுவார். எங்கள் அழைப்பை அவர் ஏற்றது மகிழ்ச்சி. ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட தேர்தல்களுக்கும் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்வார்.
40 காங்கிரஸ் பேச்சாளர்கள்: ஜம்மு காஷ்மீர் தேர்தல்பிரச்சாரத்தில் உரையாற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உட்பட 40 நட்சத்திர பேச்சாளர்களை காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அகமது மிர் கூறினார்.