கொல்கத்தா: கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை சம்பவம் தொடர்பாக வெளியான இரண்டு புதிய வீடியோக்களில் உள்ளவர்கள் மர்ம நபர்கள் அல்ல, விசாரணை நடத்தும் அதிகாரிகள் அவர்கள் என கொல்கத்தா போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
மேற்குவங்கம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட அரங்கில்எடுக்கப்பட்ட 2 புதிய வீடியோக்கள் சில நாட்களுக்கு முன்புவெளிவந்தன. அதில் மருத்துவமனை நிர்வாகத்துடன் தொடர்பில்லாத பலர் உள்ளனர். சிவப்புசட்டை அணிந்த நபர், உத்தரவுகள் பிறப்பிக்கிறார். மருத்துவமனை நிர்வாகத்துக்கு தொடர்பில்லாத இவர்கள் தடயங்களை அழித்தனரா என சமூக ஊடகங்களில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் இந்த வீடியோவில் உள்ளவர்கள் பற்றி கொல்கத்தா காவல்துறை துணை ஆணையர் இந்திரா முகர்ஜி நேற்று கூறியதாவது: பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு உள்ளூர்போலீஸார் காலை 10.30 மணிக்கு சென்றவுடன், அந்த இடம் தடைசெய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது. புதிதாக வெளியான வீடியோ, சம்பவம் நடந்த அன்று மாலை 4.40 மணிக்கு பதிவானது. அந்த இடத்தில் மாலை 4.20 மணி முதல் 4.40 மணி வரை விசாரணை நடைபெற்றது.
வீடியோவில் உள்ளவர்கள் காவல் ஆணையர் வினீத் கோயல் தலைமையிலான குழுவினர். கூடுதல் ஆணையர் முரளிதர் சர்மா, விசாரணை குழுவினருடன் அந்த இடத்தில் உள்ளார். மற்ற நபர்கள் தூர்தர்ஷன் வீடியோ கிராபர், தடயவியல் நிபுணர்கள், உள்ளூர் காவல் நிலைய பெண் அதிகாரி. சாட்சியம் அளித்த மருத்துவர் ஆகியோர் உள்ளனர். சிவப்பு சட்டை அணிந்திருப்பவர் விரல்ரேகைகளை பதிவு செய்யும் நிபுணர். அவர் பெண் மருத்துவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் விரல் ரேகைகளை பதிவு செய்தார். அந்த வீடியோவில் உள்ளவர்கள் யாரும் மர்ம நபர்கள் அல்ல. அவர்கள் தடயங்களை அழிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.