சில நேரங்களில் வெளிநாட்டில் வேலைக்காகச் செல்பவர்களை அங்குள்ள கும்பல் கொத்தடிமைகளாக வைத்து சித்ரவதை செய்து வேலை வாங்கும். அல்லது சட்டவிரோத காரியத்திற்கு பயன்படுத்தும். இந்தியாவில் சமீப காலமாக இணையதள குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்த இணையதள குற்றத்திற்கு மூளையாக இருப்பவர்கள் வெளிநாட்டில் இருந்து செயல்படுகின்றனர். அது போன்று செயல்பட்ட கும்பலிடம் கொத்தடிமையாக இருந்து வேலை செய்த இந்தியர்கள் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர். லாவோஸ் நாட்டில் நல்ல வேலை, லட்சக்கணக்கில் சம்பளம் என்று கூறி விளம்பரம் செய்யப்பட்டதை நம்பி லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து இந்தியாவில் இருந்து வேலை தேடி சென்று இணையத்தள மோசடி கும்பலிடம் சிக்கி இருந்த 47 பேர் மீட்கப்பட்டு, இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு இந்தியாவில் இருந்து வேலைக்கு செல்லும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக்கொண்டு அவர்களுக்கு சரியாக சாப்பாடு கொடுக்காமல், டேட்டிங் ஆப்களில் வேலை செய்ய சொல்கின்றனர். டேட்டிங் ஆப்களில் பெண்கள் புகைப்படங்களை பயன்படுத்தி போலி புரொபைல் உருவாக்கி அதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்தவர்களிடம் பெண்கள் போன்று சாட்டிங் செய்ய சொல்கின்றனர். அப்படி பேச ஆரம்பித்ததும் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர்.
அதிக பணத்திற்கு ஆசைப்படுபவர்கள் இக்கும்பலின் மோசடியில் சிக்கி பணத்தை இழக்கின்றனர். இந்தியாவில் இருந்து சென்றவர்களை கொத்தடிமைகளாக வைத்து டார்கெட் கொடுத்து வேலை செய்ய சொல்கின்றனர். அவர்கள் கொடுக்கும் வேலையை முடிக்கவில்லையெனில் சாப்பாடு கொடுக்காமல், ஓய்வு எடுக்க நேரம் கொடுக்காமல் அடித்து உதைத்து வேலை வாங்கியுள்ளனர். இதனால் மிகவும் சித்ரவதைக்குள்ளான இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இது தவிர இது போன்ற மோசடிக்கு இந்தியர்கள் பயன்படுத்தப்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் இந்திய அரசிடம் புகார் செய்திருந்தனர். கடந்த மாதம் அவ்வாறு லாவோஸ் நாட்டில் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட 13 பேர் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கடந்த மாதம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் லாவோஸ் சென்று இருந்தார். அப்போது இப்பிரச்னை குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசினார். அதனை தொடர்ந்து லாவோஸ் அதிகாரிகள் அங்குள்ள கோல்டன் டிரையாங்கில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அதிரடி ரெய்டு நடத்தி அங்கு கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டு இணையதள குற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்த 29 பேரை மீட்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தனர். இது தவிர 18 பேர் இந்திய தூதரகத்தில் புகார் செய்திருந்தனர். அவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக லாவோஸில் இருக்கும் இந்திய தூதரகம் ட்விட்டரில் தகவலை பகிர்ந்துள்ளது. லாவோஸ் மற்றும் கம்போடியாவிற்கு வேலை தேடி செல்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. லாவோஸ் மற்றும் கம்போடியாவில் இது போன்ற மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 635 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ரஷ்யாவில் வேலைக்கு சென்றவர்களை அந்நாட்டு அரசு உக்ரைன் போர்க்களத்தில் போரிட பயன்படுத்தி வருகிறது. அவ்வாறு சென்றவர்களில் சிலர் போரில் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபருடன் இது குறித்து பேசி இந்தியர்களை போர்க்களத்தில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.