`பதவி கிடைக்காத ஆதங்கத்தில் அப்படிப் பேசுகிறார்' – விஜயதரணி குற்றச்சாட்டு குறித்து ராஜேஷ்குமார்!

“பா.ஜ.க-வுக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன, இன்னும் பதவி வரவில்லை” என அக்கட்சி தலைவர்கள் முன்னிலையிலேயே பேசி பரபரப்பைக் கிளப்பியிருந்தார் முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி. அதுமட்டுமல்லாது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களான பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் தன்னை `அவதூறான’ வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்ததாகவும், அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஆவேசமாகியிருந்தார் அவர். இது பற்றி விஜயதரணி கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸும், ராஜேஷ்குமாரும் என்ன அவதூறான வார்த்தையில் தேர்தல் சமயத்திலும், சமீபத்திலும் விமர்சித்திருந்தனர். அவர்கள் பேசிய வார்த்தை, பெண் வன்கொடுமைச் சட்டத்தில் தடைச் செய்யப்பட்டிருக்கிறது. ஓர் ஆம்பிள்ளையை பார்த்து அந்த வார்த்தையைச் சொல்வார்களா? பெண்ணைப் பார்த்துதானே சொல்கிறார்கள். அ.தி.மு.க-விலிருந்து வந்த ராஜேஷ்குமாருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்த பிரின்ஸ்-க்கும் என்னை அதே வார்த்தையைச் சொல்லி விமர்சனம் செய்ய என்ன தகுதி இருக்கிறது. நான் வழக்குத் தொடர்ந்தால் எம்.எல்.ஏ கோர்ட்டில் சீக்கிரம் கேஸ் நடத்தி சிறைக்குச் செல்லவேண்டியதும், பதவிப்பறிப்பும் நடக்கும். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஐந்து கட்சிகள் மாறி வந்தவர். ராஜேஷ்குமார் காங்கிரஸுக்கு வருவதற்கு முன்பு பெங்களூரில் அ.தி.மு.க கொடி ஏற்றினார், பிரின்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்தது ஊருக்கே தெரியும். 25 ஆண்டுகளுக்கு முன்புதான் காங்கிரஸ் கட்சிக்கு வந்தார். அதற்காக அவர் என்னைப் போன்று பிறந்ததில் இருந்தே காங்கிரஸ் ஆக முடியுமா… நான் பிறந்ததில் இருந்தே காங்கிரஸ். இப்போது நான் பிறந்ததில் இருந்தே பி.ஜே.பி என சொல்ல முடியாது. அதே அளவுகோல் அவர்களுக்கும் இருக்கிறது. எங்கிருந்தோ ஓடிவந்து காங்கிரஸில் இருக்கிறார்கள். இனி என்னை அப்படிச் சொன்னால் அவர்கள் மீது வழக்குத்தொடுப்பேன்” என ஆவேசமானார்.

விஜயதரணி

விஜயதரணியின் குற்றச்சாட்டு குறித்து கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ்குமார் கூறுகையில், “நான் அப்படி எங்குமே சொல்லவில்லை. நான் நாகரிகமாகத்தான் பேசுவேன். அ.தி.மு.க கொடி ஏற்றியதாக ஆதாரம் இருந்தால் விஜயதரணி காட்டட்டும். காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை எனச் சொல்லிவிட்டுதான் விஜயதரணி பா.ஜ.க-வுக்குப் போனார். இங்கு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர், மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோதும் தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டது. மூன்று முறை இந்தக் கட்சி அவரை எம்.எல்.ஏ ஆக்கியது. எல்லா இடங்களிலும் அவர்களுக்கான அங்கீகாரத்தை காங்கிரஸ் கட்சி கொடுத்தது. மூன்று முறை எம்.எல்.ஏ ஆக்கிய மக்களை ஏமாற்றிவிட்டு காங்கிரஸை விட்டுவிட்டு பல எதிர்பார்ப்புகளுடன் விஜயதரணி பா.ஜ.க-வுக்குப் போனார். அங்குபோய் ஆறுமாதமாக எதுவும் நடக்காததால் வாயில் வந்ததை பேசுகிறார்.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ

நான் பெங்களூரில் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் தமிழ் மாணவர் சங்க தலைவராக இருந்தேன். அப்போது பல்கலைகழக அளவில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி வந்திருந்தார், மல்லிகார்ஜுன கார்கே வந்திருந்தார். அந்த பழக்கத்தில் என் திருமணத்துக்கும் பெங்களூர் புகழேந்தி வந்திருந்தார். நான் அ.தி.மு.க-வில் உறுப்பினராக இருந்ததாகவோ, கட்சி சார்ந்து எங்காவது இருந்ததாகவோ விஜயதரணி காட்டினால் என் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஏதோ பதவி கிடைக்கும் என காங்கிரஸை விட்டு வெளியேறினார். ஆனால் பதவி கிடைக்காத ஆதங்கத்தில் இப்படி பேசுகிறார்” என்றார்.

குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ்

இதுபற்றி குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ பிரின்ஸிடம் பேசினோம், “மனிதன் என்றால் ஸ்திரத்தன்மை வேண்டும். நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வந்ததாக விஜயதரணி நிரூபித்தால் என்ன பரிசு வேண்டுமானாலும் அவருக்கு கொடுக்கலாம். நான் 2006-ல் மாவட்டத் தலைவராக இருந்த சமயத்திலும் எனக்கு எம்.எல்.ஏ சீட் தரவில்லை. அப்போதும் நான் கட்சி மாறி போகவில்லை. விஜயதரணி பள்ளி, கல்லூரி படித்தது எல்லாம் சென்னையில்தான். கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத அவர் ராகுல் காந்திக்கு அட்வைசர் எனச் சொல்லி ஏமாற்றி இங்கு போட்டியிட்டார். அவரின் அரசியல் பயணம் முடிந்துவிட்டது. அவரை நான் அத்தகைய வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சிக்கவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.