லாகூர்,
2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால் இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.
மேலும் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. அதேபோல 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.
மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. ஆனால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்காமல் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவிற்கு தொடர்ந்து பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் முழுமையான பாதுகாப்பு கொடுப்போம் என்று உத்தரவாதம் கொடுத்தால் இந்திய அணி தாராளமாக சென்று பாகிஸ்தானில் விளையாடலாம் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். அத்துடன் இந்திய அரசும் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- “பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாங்கள் நினைப்பதை சொல்கிறார்கள். நாம் நம்முடைய கண்ணோட்டத்தில் இருக்கும் கருத்துகளை சொல்கிறோம். இருப்பினும் பாகிஸ்தானில் எப்போதும் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதாக நான் கருதுகிறேன். அதனால் வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை எனில் நம்முடைய அணி அங்கு செல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை அணிகளுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் உத்தரவாதம் கொடுத்தால் பின்னர் அங்கு விளையாடுவதில் எந்த தயக்கமும் இல்லை. அது பற்றி அரசு சிந்தித்து முடிவெடுக்கும்.
ஏனெனில் நாளின் இறுதியில் அது கிரிக்கெட்டை தாண்டிய பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டதாகும். ஒரு கிரிக்கெட்டராக நீங்கள் விளையாட விரும்பினால் எங்கு வேண்டுமானாலும் விளையாடுங்கள் என்றே சொல்வேன். ஆனால் பாகிஸ்தானில் எப்போதும் பாதுகாப்பு பிரச்சினை இருக்கிறது. எனவே அங்கே பாதுகாப்புக்கு கேரண்டி கொடுக்கும் வரை நாம் செல்லக்கூடாது” என்று கூறினார்.