ஜெருசலேம்: காசாவில் ஆறு பிணைக்கைதிகள் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இந்தக் கொலைகள் ஹமாஸ்கள் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்பதையே நிரூபிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும் பிணைக்கைதிகள் இறப்பு செய்தியைக் கேட்டு தனது இதயமே நொறுங்கிப்போனதாக தெரிவித்தார்.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், “ஹமாஸ் அவர்களை (பிணைக்கைதிகள்) உறையவைத்து கொலை செய்துள்ளது. இதற்காக இஸ்ரேல் ஹமாஸ்களை கட்டாயம் பொறுப்பேற்க வைக்கும். அவர்கள் போர்நிறுத்த பேச்சுவார்த்தையை முறியடிக்கின்றனர். பிணைக் கைதிகளை கொலை செய்பவர்கள் போர்நிறுத்தத்தை விரும்பவில்லை. ஹமாஸ்கள் அழிக்கப்படும் வரை போர் தொடரும். பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கு ராணுவ ரீதியிலான அழுத்தம் வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஒரு இஸ்ரேல் – அமெரிக்க இளைஞர் ஹெர்ஸ் கோல்ட்பெர்க் – போலின் உட்பட ஆறு பிணைக்கைதிகளின் உடல்களை காசாவின் சுரங்கத்தில் இருந்து மீட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது. பிணைக்கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் ராணுவம் சுரங்கத்துக்குள் செல்லும் சில மணிநேரத்துக்கு முன்பாக ஆறு பேரை கொலை செய்யப்பட்டது உறுதியானது. இறந்தர்வர்கள் யார் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் ராணுவம் தெரிவித்திருந்தது.
இஸ்ரேல் – அமெரிக்க இளைஞர் தவிர மற்றவர்கள் ஒரி டேனியோ(25), ஈடன் எருசலாமி (24), அல்மோக் சருசி (27), அலெக்ஸாண்டர் லோபனோவ் (33) கார்மல் கட் (40) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பிணைக் கைதிகள் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பது பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பெரிய அளவிலான எதிர்ப்பினை உருவாக்கியுள்ளது. பத்து மாத போரினை முடிவுக்கு கொண்டு வரவும், பிணைக்கைதிகளை உயிருடன் மீட்கவும் நெதன்யாகு தவறி விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு: இதனிடையே இஸ்ரேலிய பிணைக்கைதிகள் சிலரின் உடல்களை காசாவில் தாங்கள் கண்டெடுத்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்த சிறிது நேரத்தில், ஹேஸ்ட்டேஜ் ஃபோரம் என்ற முக்கியமான தன்னார்வலர்கள் குழு ஒன்று, நெதன்யாகு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து அக்குழுவெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நெதன்யாகு பிணைக்கைதிகளை கைவிட்டுவிட்டார். தற்போது இதுதான் நிஜம். நாளை முதல் நாடு ஸ்தம்பிக்கும். அதற்காக தயாராகுமாறு மக்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7-ம் தேதி முதல் காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடந்தி வரும் தாக்குதலில் 40,691 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.94,060 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலீஸ்தீன சுகாதார அமைச்சரம் தெரிவித்துள்ளது. கடந்த அக்.7-ம் தேதி பாலஸ்தீனத்தின் இஸ்லாமிய குழுவான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரைக் கொன்று, 250 பேரை பிணைக் கைதியாக பிடித்துச் சென்ற நிலையில் இந்தப் போர் தொடங்கியது.