மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவையின் பதவிக் காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதற்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான அஜித் பவார் நேற்று கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். விரைவில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் தொகுதிப் பங்கீடு இருக்கும்” என்றார்.
முன்னதாக, சத்ரபதி சிவாஜி சிலை சமீபத்தில் உடைந்து விழுந்தஇடத்தை அஜித் பவார் நேற்றுபார்வையிட்டார். பின்னர் அவர்கூறும்போது, “சத்ரபதி சிவாஜிஎங்களுடைய தெய்வம். அவருடைய சிலை உடைந்ததற்காக அனைவரும் கவலை அடைந்துள்ளோம்.
இதுகுறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி உள்ளார். சிலையை மீண்டும் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. சிலை உடைந்ததற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் அடங்கிய ஆளும் மகா யுதி கூட்டணி ஒரு அணியாக போட்டியிடுகிறது. சிவசேனா (உத்தவ் தாக்கரே), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி ஒரு அணியாக போட்டியிடுகிறது.
அங்கு சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் மகா விகாஸ் கூட்டணி 30 இடங்களில் கைப்பற்றிய நிலையில், ஆளும் மகா யுதி அணி 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தீவிரமாக, பாஜக தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.