சென்னை: பெங்களூரில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் ரயில் பெட்டி ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்ளுக்கு இடையே 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வந்தே பாரத் ரயில்களை பொருத்தவரை முழுவதும் ஏசி வசதி, பயோ கழிவறை, தானியங்கி கதவு, நவீன பாதுகாப்பு உள்பட பல்வேறு வசதிகளுடன் இயக்கப்படுகின்றன. தற்போது, இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் இருக்கை வசதி மட்டுமே உள்ளன.
இதற்கிடையில், நெடுந்தொலைவுக்கு இந்த ரயில்களை இயக்கும் விதமாக, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, வந்தே பாரத் தூங்கும் வசதி பெட்டிகள் தயாரிக்கும் பணி பெங்களூரில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த ரயிலை தயாரித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்க அனைத்து நடவடிக்கையும் ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் ரயில் பெட்டி ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ரயில் 16 பெட்டிகளைக் கொண்டது. இந்த ரயிலில் 11 மூன்றடுக்கு ஏசி தூங்கும் வசதி பெட்டிகளும், 4 இரண்டு அடுக்கு தூங்கும் வசதி பெட்டிகளும், ஒரு முதல் வகுப்பு தூங்கும் வசதி ஏசி பெட்டி என மொத்தம் 16 பெட்டிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. மூன்றடுக்கு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் 611 படுக்கைகளும், இரண்டுக்கு தூங்கும் வசதி பெட்டிகளில் 188 படுக்கைகளும், முதல் வகுப்பு பெட்டியில் 24 படுக்கைகளும் உள்ளன.
இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ. வரை வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. உலகத்தரம் வாய்ந்த அதிநவீன வசதிகளுடன் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் வசதியுடன் ரீடிங் லைட்,கண்காணிப்பு கேரமா, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக கழிவறைவசதி, தீ பாதுகாப்பு வசதி உள்பட பல வசதிகள் உள்ளன.
பெங்களூரில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தின் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். இந்த தூங்கும் வசதி கொண்ட வந்தே ரயில் அடுத்த 3 மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.