விக்ரமம்: வெட்டாந்தரையே வகுப்பறை; கட்டடச் சுவரே கரும்பலகை – பள்ளிக் கட்டடத்துக்கு ஏங்கும் மாணவர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம், விக்ரமம் ஊராட்சி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளி. 50 ஆண்டுகள் பழைமையான இந்தப் பள்ளியின் கட்டடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்டபோது அங்குப் பயிலும் மாணவர்களுக்கு மாற்றுக் கட்டடம் ஏதும் கட்டித் தராமல் அருகிலுள்ள ரேஷன் கடையில் வைத்து மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை…

அப்பள்ளிக்குச் சென்று நேரில் பார்த்தபோது கறை படிந்த பள்ளி சமையலறைக் கட்டடத்தின் வெளிப்புற சுவரில் தீட்டப்பட்ட கறுப்பு நிறம்தான் மாணவர்களுக்கான கரும்பலகை என்பது தெரிந்தது. மேலும் வேப்ப மர, மா மர நிழலில்தான் 9 மாணவிகளும் 9 மாணவர்களும் என 18 மாணாக்கர்கள் கல்விப் பயிலும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இது குறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், “இந்த ஸ்கூல்’ல இங்க பில்டிங் இடிச்சி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகுது. வருஷக்கணக்கா இந்த மரத்து நிழலுல தான் படிச்சுட்டு இருக்குறோம். இங்கிட்டு வெயில் வந்தா அங்கிட்டு உள்ள மரத்து நிழல்’லயும், அங்கிட்டு வெயில் வந்தா இங்கிட்டு உள்ள மரத்து நிழல்’லயும் மாறி மாறி உட்கார்ந்துக்குவோம். மழை வந்தா மட்டும் இங்க உள்ள சமையக்கட்டுல போய் உட்கார்ந்து இருப்போம். அங்க படிக்க கஷ்டமா இருக்கும், ஏனா அதுக்குள்ள 18 பேரு உட்கார்ந்து படிக்க முடியாது. இதனால எங்க டீச்சர் மேலடத்துல கேட்டு அஞ்சாவது நாலாவது மட்டும் ஸ்கூல்ல இருக்கச் சொல்லிட்டு மத்த பிள்ளைகளை விட்டுருவாங்க. எங்களுக்கு புது ஸ்கூல் கட்டித் தந்தா நாங்க நல்லா படிச்சு பெரிய ஆளா வருவோம்” என்றனர், வகுப்பறை குறித்த ஏக்கம் ததும்ப!

இது குறித்து அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரிடம் கேட்டபோது, சரியான விளக்கம் தராமல் நமது பேச்சைத் தட்டிக் கழித்தார். மேலும் அப்பள்ளியில் ஓர் ஆசிரியர் மட்டும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் வைத்தியநாதனிடம் கேட்டோம். “நான் இங்க ஊராட்சி மன்றத் தலைவரா இருக்கேன். எங்க முன்னோர்களெல்லாம் இந்தப் பள்ளிக்கூடத்தைக் கொண்டு வர ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இந்தப் பள்ளிக்கூடத்தைக் கடந்த இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இடிச்சிட்டு, கட்டித் தர்றோம்’னு சொன்னாங்க. ஆனா இன்னும் கட்டித் தரல… நாங்களும் தாசில்தார், கலெக்டர்’னு பெட்டிஷன் கொடுத்தோம்.

அதோட மட்டுமல்லாம எங்க கிராமம் சார்பா `மக்களுடன் முதல்வர்’ திட்டத்துலயும் பெட்டிஷன் கொடுத்தோம். ஆனா இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படல. இதனால எங்க புள்ளைங்க மரத்தடி நிழல்’ல தான் படிச்சிக்கிட்டு இருக்காங்க. இங்க படிக்க வசதி இல்லாம, நிறைய புள்ளைங்கள பக்கத்துல உள்ள பிரைவேட் ஸ்கூல்ல சேர்ந்துட்டாங்க. எங்க புள்ளைங்களுக்கு ஒரு புது கட்டடம் கட்டிக் கொடுக்க இந்த அரசாங்கம் உதவி பண்ணனும்” என்றார்.

அந்த ஊர் மக்களிடம் இந்தப் பள்ளி குறித்துப் பேசியபோது, “கஜா புயல் வந்த சமயத்துல, இங்கதான் எங்க சனமெல்லாம் ஒண்டிக்கிடந்தோம். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி புது கட்டடம் கட்டித் தரேன்னு சொல்லிட்டு, இருந்த கட்டடத்தை இடிச்சு அள்ளிட்டு போயிட்டாங்க. இந்த ரெண்டு வருஷமா எங்க புள்ளைங்க மழையிலயும் வெயில்லயும் கடந்து காயுதுங்க, நாங்கதான் படிக்காம போயிட்டோம், எங்க மக்களாவது படிச்சு மேல வரும்னு பார்த்தா, அவங்க படிப்பு பாழா போகுது.

எங்க பாதி வாழ்க்கை இந்த வயக்காட்டுலையே முடிஞ்சிடுது, வேலை வெட்டிக்குப் போனதுக்கு அப்புறம் மழை வந்தா எங்க புள்ளைங்க இந்த ரெண்டு வருஷத்துல பாதியிலேயே வீடு திரும்பிடுதுங்க. அதுங்க பள்ளிக்கூடத்துல பத்திரமா இருக்குங்குற தெம்புலதான் நாங்க, சில நெட்டு போயி உழைச்சிட்டு வர்றோம். மழை காலத்துல ஆறு, குளம், குட்டை எல்லாம் நெரம்பிடும். இந்த பயத்துல உழைச்ச காசுகூட வாங்காம பாதியிலேயே கரையேறி வந்துருவோம். இதனால எங்க பொழப்பும் பிள்ளைகளோட படிப்பும் கெட்டுப் போகுது. இங்க உள்ள அதிகாரிங்கதான் இதுக்கு நல்ல வழி சொல்லணும்” என்றனர்.

இது குறித்து பட்டுக்கோட்டை தாசில்தார் ராமசந்திரனிடம் கேட்டபோது, “அந்தப் பள்ளியின் கட்டடம் சம்பந்தமாக எங்கள் துறை டைரக்டரும் (Monitoring officer), ஆதிதிராவிடர் நலத்துறையும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு வருகை தந்து பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

தற்போது தாட்கோ மூலமாக புதிய கட்டடம் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவ்வூரைச் சார்ந்த முன்னாள் மாணவர் ராஜேந்திரன், மாணவர்களின் நலன் கருதி தற்காலிக குடில் (Shed) ஒன்று அமைத்துத் தருவதாகக் கூறினார். மேலும் நான் கடந்த 25 நாள்களுக்கு முன்புதான் அப்பள்ளியைப் பார்வையிட்டேன். நாங்கள் மக்களுக்குச் சேவை செய்யத்தான் இந்தப் பதவிக்கு வந்திருக்கிறோம். நீங்கள் கவலைப்படுவதற்கு முன்பே, நாங்கள் கவலைப்பட்டு, பணியை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்து வருகிறோம்” என்றார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி விவகாரம் கேட்டபோது, “இந்தப் பள்ளி கட்டடம் தொடர்பாக எஸ்ட்டிமேட் அனுப்பப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அம்மாணவர்களுக்குப் பள்ளிக் கட்டடம் கட்டித் தரப்படும். அங்குத் தற்காலிக குடில் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.