Fact Check Virat Kholi News : கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என விராட் கோலி பேசியதுபோல் ஒரு வீடியோ இணையத்தில் உலா வருகிறது. அதில், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என விராட்கோலி வலியுறுத்துகிறார். ஆனால், இந்த வீடியோ உண்மையா? விராட் கோலி அப்படி பேசினாரா? என்று விசாரித்தால் அது உண்மையில்லை என தெரிய வருகிறது. விராட்கோலி அப்படி பேசவே இல்லை, கொல்கத்தா விவகாரம் குறித்து அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்த வீடியோ விராட் கோலி பேசியதாக போலியாக தயாரித்து பரப்பப்படுகிறது. வீடியோவின் உண்மை தன்மையை ஆராய்ந்தால் இந்த வீடியோ 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. ராயல் சேலஞ்சர்ஸ் அணி குறித்து விராட் கோலி தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அதில், ஆர்சிபி அணி தன்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை செய்திருப்பதாகவும், அந்த அணியால் கிடைத்த விஷயங்களை எல்லாவற்றையும் பட்டியலிடுவது சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வாழ்க்கையில் நடந்த ஏற்றத் தாழ்வுகள் குறித்தெல்லாம் பேசும் அவர், 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப் பயணம் குறித்தும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
கிரிக்கெட்டில் வெற்றி பெறும்போது உடனிருப்பவர்கள், தோல்வி அடையும்போது இருப்பதில்லை என தெரிவிக்கும் விராட் கோலி, கடினமான காலங்களில் இருந்து மீண்டு வருவதற்கு கொஞ்சம் நேரம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதுதவிர அந்த வீடியோவில் தன்னுடைய வாழ்க்கையின் அனுபவங்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோ ஆர்சிபி யூ டியூப் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. வீடியோவின் உண்மை தன்மையை பார்க்கும்போது கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை குறித்து அவர் பேசவில்லை என்பதும், சிலர் தவறாக அந்த வீடியோவை திரித்து பரப்புவதும் உறுதியாகிறது.
இதேபோல் மற்றொரு வீடியோவில் விராட் கோலி சுப்மன் கில்லை விமர்சித்து பேசுவதுபோல் வைரலாக்கப்படுகிறது. அந்த வீடியோவும் பொய்யாக உருவாக்கப்பட்டதே. ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் விராட் கோலி கில்லை விமர்சிப்பதுபோல் உருவாக்கப்பட்டு ஆன்லைனில் உலாவிடப்பட்டுள்ளது. அதனால், இப்படியாக சமூகவலைதளங்களில் வரும் வீடியோக்களை பார்த்தவுடன் நம்பாமல் அதன் உண்மை தன்மையை உறுதிபடுத்திக் கொள்வது சிறந்தது.