கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, மலையாள சினிமா முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலர் மீது வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த திரைத்துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை போலீஸில் புகாராகப் பதிவு செய்துவருகின்றனர்.
மறுபக்கம் தமிழ் திரைத்துறையில் இதுபோன்றவை இல்லை என்று ஒரு தரப்பினரும், இங்கும் இதுபோன்றவை இருக்கிறது என்று ஒரு தரப்பினரும் தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில், மலையாள திரைத்துறையில் பரபரப்பாக இருக்கும் இந்த விவகாரம் குறித்து கேள்விக்குப் பத்திரிகையாளரிடம் நடிகர் ஜீவா கோபப்பட்ட சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
தேனியில் இன்று துணிக்கடை திறப்பு விழாவுக்கு வந்த ஜீவா செய்தியாளர்களிடம் பேசுகையில், “நல்ல விஷயத்துக்கு வந்திருக்கிறோம். நல்ல விஷயத்தைப் பேசுவோம். பல திரைத்துறைகளில் பல விஷயங்கள் நடக்கிறது. நல்ல சூழலை வைத்திருப்பதுதான் எங்களுடைய வேலை. தமிழ் திரைத்துறையில் இதுபோன்ற பிரச்னைகள் இல்லை. கேரளாவில்தான் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே நகர்ந்தார்.
அப்போது மீண்டும் அதுபற்றிய கேள்விகள் பத்திரிகையாளர்கள் தரப்பிலிருந்து வரவே, `நல்ல விஷயத்துக்கு வந்திருக்கிறோம். அறிவு இருக்கா…’ என ஒரு பத்திரிகையாளரிடம் ஜீவா கோபப்பட்டார்.
இந்தச் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.