’96’ பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் திரைப்படம் ‘மெய்யழகன்’. இப்படத்தில் கார்த்தியுடன், அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் கோவையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்வில் பேசிய கார்த்தி,” ‘சலங்கை ஒலி’, ‘வருஷம் பதினாறு’ போன்ற படமெல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரியான படங்கள் இப்போ வராதானு தோணியிருக்கு. உறவுகள் நமக்கு ரொம்ப அவசியம். அதைச் சொல்ற படமாக ‘மெய்யழகன்’ இருக்கும். ரொம்ப உருக்கமான அழகான கதை இது. ஒரே வாரத்துல இந்தக் கதையை பிரேம் குமார் எழுதியிருக்கார். பிரேம் மாதிரியான நண்பரை எங்களுக்குக் கொடுத்ததுக்கு விஜய் சேதுபதிக்குத்தான் நன்றி சொல்லணும். அவர் இல்லைனா இவர் வெளிய வந்திருக்கமாட்டார். அவர்தான் இவரை வெளிய புடிச்சு தள்ளிவிட்டாரு.

என்னுடைய கல்யாணத்துக்குப் பிறகு எனக்கு கோவையில் நடக்கிற விழா இதுதான்னு நினைக்கிறேன். எனக்கும் இந்த ஊருக்கும் எந்த மாதிரியான சொந்தம் இருக்கோ அந்த மாதிரியான ஒரு விஷயத்தைப் பேசுகிற படமா `மெய்யழகன்’ இருக்கும். என்னுடைய வேர்கள் இங்கதான் இருக்கு. அதனால இந்த விழாவை இங்க நடத்தினா நல்லாருக்கும்னு தோணுச்சு!” எனக் கூறினார்.
சூர்யா, “மெய்யழகன் படத்தோட பேருக்கு கீழ ஜோதிகா, சூர்யானு எங்க பெயர் போடுறதுக்கு வாய்ப்பு கொடுத்த பிரேம் குமாருக்கு நன்றி. 2D-யோட முக்கியமான படமாக இது இருக்கும். படம் பார்த்து முடிச்சுட்டு கார்த்தியை வீட்ல போய் கட்டிப் பிடிச்சேன். படத்தை கண்டிப்பா பாருங்க. படத்தை படமாக பாருங்க. வணிக ரீதியா பார்க்காதீங்க. ரசிகர்களோட அன்புக்கு என்னைக்கும் நான் தலை வணங்குறேன். இரண்டரை வருஷத்துக்கும் மேல ஆயிரம் பேர் இரவு பகலாக ‘கங்குவா’ படத்துக்காக உழைச்சிருக்கோம்.
.jpeg)
தமிழ் சினிமாவுக்கு ஸ்பெஷலான ஒரு படத்தை கொடுக்கணும்’னு உழைப்பை பலரும் கொடுத்திருக்காங்க. மழை, வெயில்னு பார்க்காமல் மலை உச்சி, கடலுக்குள்ள கஷ்டப்பட்டு படப்பிடிப்பை நடத்தினோம். அந்த உழைப்பு வீண் போகாதுனு நம்புறேன். அதுக்கான அன்பும் மரியாதையும் நிச்சயம் நீங்க கொடுப்பீங்கனு நம்புறேன். ரஜினி சாரோட ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி ரிலீஸாகுது. நான் பிறக்கும்போது சினிமாவுக்கு வந்தவர். மூத்தவர் ரஜினி சார் 50 வருஷமாக தமிழ் சினிமாவோட அடையாளமாக இருக்கிறவர். சூப்பர் ஸ்டார் படம் வர்றதுதான் சரியாக இருக்கும். ‘கங்குவா’ ஒரு குழந்தை. அந்தக் குழந்தை வர்ற அன்னைக்குத்தான் அதுக்கு பிறந்தநாள். அன்னைக்கு நீங்க பண்டிகையாக படத்தை கொண்டாடுவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு.” எனப் பேசினார்.