ஐதராபாத்,
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இந்த மாநிலங்களில் பல்வேறு இடங்களில் ரெயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின, சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் சுமார் 20 ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். கனமழை பாதிப்புகள் குறித்து ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் கேட்டறிந்தார்.
அப்போது, நடைபெற்று வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து மோடியிடம் சந்திரபாபு நாயுடு விளக்கமளித்தார். மேலும், நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த கூடுதல் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், விசைப் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தேவை என்று மத்திய அரசிடம் சந்திரபாபு நாயுடு கேட்டுக் கொண்டார். மாநிலத்திற்குத் தேவையான உதவிகளை வழங்க சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்துள்ளார்.