ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவை கனமழை புரட்டிப்போட்டுள்ள நிலையில் வெள்ள பாதிப்புகள், மீட்பு, நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. விஜயவாடாவில் ஞாயிறு பின்னிரவில் ஆய்வைத் தொடங்கிய முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாலை 3 மணி வரையிலும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பாதுகாப்பு நிலவரங்களையும் பொருட்படுத்தாமல் முதல்வர் ஆய்வில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, கனமழை வெள்ளத்தால் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விஜயவாடா வெள்ளக் காடாகியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மாநில அரசு மழை பாதிப்பிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க அனைத்து வகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகிறது என்றார். மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர்சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
விஜயவாடாவில் மட்டும் 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 17 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திரா மழை வெள்ளத்தால் இதுவரை 1,11,259 ஹெக்டேர் அளவிலான வேளாண் பயிர்களும், 7,360 ஹெக்டேர் அளவிலான தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன. மாநிலம் முழுவதும் நேற்று (செப்.1) 28.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஆந்திரா, தெலங்கானாவில் மழை தொடர்பான சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்தனர். இதில் 9 பேர் ஆந்திராவிலும், 10 பேர் தெலங்கானாவிலும் இறந்துள்ளனர். மழை, வெள்ளம் காரணமாக தெற்கு மத்திய ரயில்வே 140 ரயில்களை ரத்து செய்துள்ளது, 97 ரயில்கள் திருப்பிவிட்டப்பட்டுள்ளன. சுமார் 6000 பயணிகள் பல்வேறு ரயில் நிலையங்களில் சிக்கியுள்ளனர்.
தெலங்கானாவில் தேர்வுகள் ரத்து: தெலங்கானாவில் இன்றும் மிதமான மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் இன்று (திங்கள்கிழமை) மாநிலம் முழுவதும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. பல்வேறு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஹைதராபாத்தின் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பிடெக் 3ஆம் ஆண்டு தேர்வு, பி ஃபார்ம் 3ஆம் ஆண்டு தேர்வு, எம்பிஏ முதலாம் ஆண்டு முதல் பருவத் தேர்வுகள் வரும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் ஒஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுத்துறை இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில் இன்று நடைபெறவிருக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. மற்ற தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும். இன்று ஒத்திவைக்கப்படும் தேர்வுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
இதற்கிடையில் ஆந்திரா, தெலங்கானா முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மழை, வெள்ள பாதிப்பு நிலவரங்களைக் கேட்டறிந்ததோடு மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்யும் என்று உறுதியளித்தார்.