புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு மாநில முதல்வர்களுடன் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக, தென் மத்திய ரயில்வே (SCR) மேலும் 21 ரயில்களை ரத்து செய்துள்ளது. பல இடங்களில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதாலும், தண்ணீர் தேங்கியுள்ளதாலும் மேலும் 10 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட 21 ரயில்களில், சென்னை சென்ட்ரல் – சாப்ரா விரைவு ரயில், சாப்ரா-சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-புதுடெல்லி, புதுடெல்லி – சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென் மத்திய ரயில்வே (எஸ்சிஆர்) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரிடம் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இரு மாநிலங்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். நிலமையை எதிர்கொள்ள மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியது குறித்து அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நிலைமை குறித்தும், சேதங்கள் குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி, எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படாத வகையில் மாநில அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை பிரதமரிடம் விளக்கினார்.
மேலும், கனமழையால் கம்மம் மாவட்டம் பெரும் பாதிப்பைச் சந்தித்தது குறித்தும், மழையினால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது குறித்தும் பிரதமரிடம் முதல்வர் விளக்கினார். மாநில அரசு இயந்திரம் மிகுந்த விழிப்புடன் இருந்து உயிரிழப்பைத் தடுத்ததற்காக பிரதமர் மோடி பாராட்டினார்.
அவசர சேவைகளை வழங்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு தேவையான உதவிகளையும் நிவாரணங்களையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் கூறினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தெலங்கானா மாநிலத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கும் இன்று (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.