புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர் அமனதுல்லா கான், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி ஆக்லா சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான அமனதுல்லா கான், டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக டெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இவ்விரு வழக்குகளின் அடிப்படையில் பணமோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை, இன்று (திங்கள் கிழமை) அவரை கைது செய்தது.
இதையடுத்து அமனதுல்லா கானின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளில், “பாஜகவின் அமலக்கத்துறை, சட்டப்பேரவை உறுப்பினர் அமானதுல்லா கானை போலி வழக்கில் கைது செய்துள்ளது. ஒரு சர்வாதிகாரியின் கொடுங்கோன்மைக்கு புரட்சியாளர்கள் தலைவணங்க மாட்டார்கள். உலகின் மிகப்பெரிய ஊழல் கட்சியான பாஜக, கடுமையாக முயற்சி செய்யலாம். ஆனால், ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கேஜ்ரிவாலின் புரட்சியை முடிவுக்கு கொண்டு வர முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கைது செய்யப்படுவதற்கு முன் அமனதுல்லா கான் வெளியிட்ட வீடியோவில், “சர்வாதிகாரியின் உத்தரவின் பேரில் அவரது கைப்பாவையாக உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை எனது வீட்டுக்கு வந்தனர். என்னையும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களையும் துன்புறுத்துவது சர்வாதிகாரியின் நோக்கம். மக்களுக்கு நேர்மையாக இருப்பது குற்றமா? இன்னும் எத்தனை காலம்தான் இந்த சர்வாதிகாரியின் ஆட்சி நீடிக்கும்?” என தெரிவித்திருந்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் அமலாக்கத் துறையின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னாள் அமைச்சர் மணிஷ் சிசோடியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாஜகவுக்கு எதிராக எழுப்பப்படும் ஒவ்வொரு குரலையும் ஒடுக்க வேண்டும்; ஒடுக்க முடியாதவர்களை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும். இது மட்டும்தான் அமலாக்கத் துறையின் ஒரே வேளை”என தெரிவித்துள்ளார்.
தன் மீதான வழக்குக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் அமனதுல்லா கான் கோரிய முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.