இயக்குநர் செல்வராகவன் தான் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் குறித்து உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெயிட்டிருக்கிறார். அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தப் படம் வெளியானப்போது ஒரு சிலரால் கொண்டாடப்பட்டாலும் சில கலவையான விமர்சனங்களும் வந்தன. பெரும் வரவேற்பை ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் பெறவில்லை. ஆனால், இப்போது அப்படத்தையும், அதில் உள்ள பாடல்களையும் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். ‘ஆயிரத்தில் ஒருவன் ’ இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்நிலையில் செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் குறித்து பேசி வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர், ” நிறைய பேர், எத்தனையோ முறை என்னை ஆயிரத்தில் ஒருவன் படம் பற்றி பேச சொல்லி இருக்கிறார்கள். எனக்கென்னவோ பேசவே தோன்றவில்லை. ஏனென்றால் அந்த படம் கொடுத்த ரணங்கள், மனசு முழுக்க காயங்கள், தழும்புகள் அது என்றைக்கும் வலிச்சிக்கிட்டேதான் இருக்கும். பேச தோணல. அவ்ளோ வலி யாரும் அனுபவிச்சு இருக்க மாட்டாங்க. ஆயிரத்தில் ஒருவன் படம் ஆரம்பிக்கும் போது ஒரு புது அனுபவத்தை மக்களுக்கு கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன்.
ஆரம்பித்ததும் ஒரு நல்ல விஷயம் எனக்கு புரிந்தது. நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எல்லோருமே உயிரைக் கொடுத்து வேலை செய்யும் ஒரு டீம் கிடைத்திருக்கிறது என்று. அது மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம். பாம்புகள், தேள்கள், அட்டைப்பூச்சிகள் கூட போராடி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பை நடத்தினோம். பாதி படம் முடியும்போதே அந்த பட்ஜெட்டில் படத்தை முடிக்க முடியாது என எனக்கு தெரிந்துவிட்டது. உடனே தயாரிப்பாளரை கூப்பிட்டு பேசினேன். பட்ஜெட் எங்கோ செல்கிறது. உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை. நான் படத்தை டேக்ஓவர் செய்துகொள்கிறேன், நீங்கள் இதுவரை போட்ட பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்துவிடுகிறேன் என கூறினேன்.
ஆனால் அவர் நானேதான் தயாரிப்பேன், இன்னும் ஐந்து கோடி கூட தருகிறேன் என சொன்னார். ஆனால் அதையும் தாண்டி தேவைப்பட்டது. அதனால் நானே வட்டிக்கு வாங்கி பாக்கி படத்தை எடுத்து முடித்தேன். போஸ்ட் ப்ரொடக்ஷனில் VFX காட்சிகள் முடிக்க ராத்திரி பகலாக கஷ்டப்பட்டோம். எத்தனையோ இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறோம். ஒரு வருடம் படத்தை எடுத்து முடித்து விட்டோம்.
படம் ரிலீஸ் ஆன பிறகு ஒவ்வொருவரும் படத்தை குத்தி குத்தி கிழிச்சாங்க. இவன் யாரு இப்படி எடுக்க என போஸ்டர் ஒட்டினார்கள். தெலுங்கில் கொஞ்சம் நன்றாக ஓடியது ஆறுதலாக இருந்தது. எனக்கு தேவையில்லை, ஆனால் படத்தில் உழைத்த கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் மற்றும் டெக்னிஷியன்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் போய்விட்டதே என வருத்தமாக இருந்தது. அதற்காக இன்னைக்கு வரைக்கும் அழுதுகிட்டுதான் இருக்கேன்.
“இப்போது சோழர்களை பற்றி, தமிழ் அரசர்களை பற்றி படம் எடுப்பவர்கள் எங்களுக்கு ஒரு நன்றி கார்டாவது போடுங்க. அந்த கரடு முரடான முள் பாதையில் ஊருண்டுகிட்டு போனவங்க அதற்கு முன் யாரும் இல்லை. நானும், எங்க டீமும் மட்டும்தான். அது மட்டும்தான் என் தாழ்மையான வேண்டுகோள்” என்று செல்வராகவன் உருக்கமாக பேசி இருக்கிறார்.
விகடன் Whatsapp சேனலுடன் இணைந்திருக்க இங்கே க்ளிக் செய்யவும்: https://whatsapp.com/channel/0029Va7F0Hj0bIdoYCCkqs41