புதுடெல்லி: ‘‘வரும் 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். நீங்களும் இந்தப் பயணத்தில் பங்கேற்பீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். மேலும் அதிகமான இந்திய நிறுவனங்கள் சர்வதேச பிராண்ட்களாக உருவெடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
எக்கனாமிக்ஸ் டைம்ஸ் உலக தலைவர்கள் அமைப்பின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில்இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசிய தாவது:
அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னோடியாக இருக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். உங்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்பது எங்கள் வாக்குறுதி, புதுமை படைப்போம் என நீங்கள் உறுதி கொடுங்கள். சீர்திருத்தம் செய்வதே எங்கள் வாக்குறுதி, அவற்றை செயல்படுத்துவோம் என உறுதி கொடுங்கள்.
நிலையான கொள்கைகளை வழங்குவது எங்கள் வாக்குறுதி,நேர்மறையான செயல்பாடு களுக்கு நீங்கள் உறுதி கொடுங்கள். அதிக வளர்ச்சியில் கவனம் செலுத்துவது எங்கள் வாக்குறுதி. உயர் தரத்துக்கு நீங்கள் உறுதி கொடுங்கள். பெரிதாக சிந்தியுங்கள். நாம் இணைந்து பல வெற்றிக் கதைகளை எழுதுவோம்.
மக்களவையில் எங்களுக்கு எண்ணிக்கை குறைந்துவிட்டதால், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான லட்சியமும் ஆற்றலும் மங்கிவிட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், வாக்காளர்களின் நம்பிக்கையைப் போலவே, சீர்திருத்தங்களை தொடர வேண்டும் என்ற எங்கள் தீர்மானம் மிகவும் வலுவாக உள்ளது. எனவே, 21-ம் நூற்றாண்டின் 3-வது தசாப்தம் இந்தியாவுக்கு பொற்காலமாக அமையும்.
இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுப்பதற்கு 4 தூண்கள் அவசியமாகின்றன. மாணவர்களின் கல்வி மற்றும் திறனை அதிகரிப்பது, உலகளாவிய உணவு கூடமாக இந்தியாவை உருவாக்குவது, பசுமை எரிசக்தியை ஊக்குவிப்பது, தொழில்நுட்ப உதவியுடன் முக்கிய சுற்றுலா தலமாக இந்தியாவை மாற்றுவது ஆகியவைதான் அந்த 4 தூண்கள். உலகம் முழுவதும் ஒவ்வொருவருடைய வீட்டிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு உணவுப் பொருளாவது இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் தீர்மானம்.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 90% வளர்ச்சி அடைந்துள்ளது. இது உலக நாடுகளின் சராசரி பொருளாதார வளர்ச்சியான 35 சதவீதத்தைவிட 2 மடங்குக்கும் அதிகமான வளர்ச்சி ஆகும். இந்தியாவின் வளர்ச்சி சர்வதேச அளவில் தலைப்புச் செய்தியாக இடம்பெறுகிறது. இந்திய பொருளாதாரம், சர்வதேச அமைப்புகளின் கணிப்புகளை மிஞ்சி அதிகவளர்ச்சியை எட்டி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.