மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைன் படை ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் நுழைந்து கடந்த ஒரு மாதமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ரஷ்யாவின் தரப்பு தகுந்த எதிர்வினையாற்றி வருகிறது.
இந்தநிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரண்டு ட்ரோன்கள் உட்பட 15 பிராந்தியங்களில் உக்ரைன் ஏவிய 158 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து உக்ரைன் தொடர்ச்சியாக ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புஅமைச்சகம் கூறுகையில், “உக்ரைன் எல்லையில் உள்ளகுர்ஸ்க், பிரையன்ஸ்க், வோரோனேஜ் மற்றும் பெல்கோரோட் ஆகிய பகுதிகளில் 122 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளது. மாஸ்கோ பிராந்தியத்தில் உள்ளஅதிகாரி ஒருவர் கூறுகையில், “கஷிரா நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை தகர்க்க மூன்று ட்ரோன்கள் முயன்றன. ஆனால், குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவில் சேதங்கள் இல்லை. மின்சார விநியோகம் தடைபடவில்லை” என்றார்.
ஆனால், கபோட்னியாவில் உள்ள மாஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதலை நடத்தியது. இந்த நிலையில், தங்களது மின் உற்பத்தி கட்டமைப்புகளை உக்ரைன் குறிவைப்பதாக ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது. 2022 பிப்ரவரியில் உக்ரைனில் ரஷ்யா தனது தாக்குதலை தொடங்கியதிலிருந்து இருதரப்பினரும் மாறி மாறி எரிசக்தி உள்கட்டமைப்பை தகர்ப்பதையே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.