ஓய்வை அறிவித்த சிஎஸ்கே அணியின் ஜாம்பவான்! இனி கிரிக்கெட் விளையாடப்போவதில்லை!

Dwayne Bravo announces retirement: மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ தற்போது நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் 2024 சீசனுடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 40 வயதான பிராவோ தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பிராவோ. மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரராக இருந்த பிராவோ, CPL போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இதுவரை தனது டி20 வாழ்க்கையில் 578 போட்டிகளில் விளையாடி 630 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் பேட்டிங்கில் 6,970 ரன்கள் அடித்துள்ளார்.

2013 முதல் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் டுவைன் பிராவோ தற்போது கரீபியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 100 CPL போட்டிகளில் விளையாடி இதுவரை 128 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்தியவராக பிராவோ உள்ளார். ஆகஸ்ட் 31ம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வு குறித்து வெளிப்படுத்தினார். “இது ஒரு சிறந்த பயணம். இன்று நான் கரீபியன் பிரீமியர் லீக்கிலிருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்க விரும்புகிறேன். இந்த சீசன் எனது கடைசி பருவமாக இருக்கும். மேலும் எனது கரீபியன் மக்கள் முன்பு எனது கடைசி கிரிக்கெட் போட்டியை விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் எனது அணியுடன் முடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

 
 

 

View this post on Instagram

 

 
 
 

 
 

 
 
 

 
 

A post shared by Dwayne Bravo aka @djbravo47)

கரீபியன் பிரீமியர் லீக்கில் இருந்து இந்த ஆண்டு ஓய்வை அறிவித்தாலும், பிராவோ 2022ம் ஆண்டே இந்தியன் பிரீமியர் லீக்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த பிராவோவின் ஓய்வு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. ஏனெனில் டெத் ஓவர்களில் பேட்டிங் மற்றும் பவுலிங் என சென்னை அணிக்கு முக்கியமான ஒரு வீரராக பிராவோ இருந்தார். கடந்த இரண்டு சீசன்களாக சிஎஸ்கே அணிக்கு பவுலிங் கோச்சாக இருந்து வருகிறார். கரீபியன் பிரீமியர் லீக்கில் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனை மட்டுமில்லாமல், அனைத்து டி20 போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார் பிராவோ. 

24.28 என்ற பந்துவீச்சு சராசரியில் 630 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 கிரிக்கெட்டில் மிகவும் வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக பிராவோ இருந்து வருகிறார். இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் ஒரு வீரராக இருந்து சர்வதேச பயிற்சியாளராக மாறி இருந்தார். டி20 உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து போன்ற அணியை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.