நாகர்கோவில்: குமரி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அத்துமீறி அழிக்கப்படும் மலைக் குன்றுகளால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் நீண்ட மேற்கு தொடர்ச்சி மலைகளையும், குன்றுகளையும் அடங்கிய மாவட்டம். இதனால் தான் இங்கு கேரளாவை போன்று மழை பொழிவு அதிகம் இருப்பதுடன் இயற்கை செழிப்புடன் விவசாயமும் சிறந்தோங்குகிறது. அதேசமயம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சில குவாரிகளில் மட்டும் அனுமதி பெற்றுவிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மலைகளை பெயர்த்து கல், ஜல்லி மற்றும் கனிமவளங்கள் கடத்தப்படும் அத்துமீறல்களும் இங்கே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் குமரி மாவட்டமும் வறட்சியின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது.
ஆனால், இதை உணராமல், யுனஸ்கோவால் பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பாறைகள், மற்றும் கனிமவளங்களை பெயர்த்து எடுப்பதற்கு கனிமவளத்துறை அனுமதி அளித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கனிமவள கொள்ளைக்கு துணபோனதாக சமீபத்தில் குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவள அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் ரூ.10 லட்ச அபராதமும் விதித்தது.
கனிமவள கொள்ளைக்கு கடும் எச்சரிக்கை மணியாக இது அமைந்த பி்ன்னரும் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கும், பிற பகுதிகளுக்கும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் பாறைகள் உடைத்து கொண்டு செல்லப்படுகிறது. நான்கு வழிச் சாலை பணிகளுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து மணல் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்தன. ஆனால் அதன் பின்னர் நான்கு வழிச் சாலை பணிகளுக்கு எனக்கூறி மீண்டும் குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மலைகளையும், மலைக்குன்றுகளையும் அழிக்கும் முயற்சி நடைபெறுகிறது.
குறிப்பாக, திருவட்டாறு அருகே கல்லுப்பாலம் பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் உள்ள மலைக் குன்றை உடைத்து பாறைகள் மற்றும் மண் என அனைத்தையும் எடுத்துச் செல்வதற்கான முயற்சி நடந்து வருகிறது. இந்த மலைக்குன்றுகள் அழிந்தால் அப்பகுதியில் வயநாடு போன்ற நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்படலாம் என்று அங்குள்ள மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நான்கு வழி சாலை பணிக்கு நெல்லை மாவட்டத்தில் இருந்து மண் கொண்டு வருவதற்கு ஒப்பந்ததாரர்கள் அனுமதி பெற்றுவிட்டு தற்போது குமரி மாவட்டத்தில் அதிகாரிகளின் துணையோடு கனிமவள கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் ஏற்கெனவே பொறுப்பில் இருந்து இடமாறுதலாகி சென்ற உயர் அதிகாரிகள் கல்குவாரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி அளித்துச் சென்றதாக தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, நட்டாலம் பகுதியில் செயல்பட்டு வந்த கல்குவாரிக்கு சட்டவிரோதமாக அனுமதி கொடுத்ததாக கூறி அனுமதி அளித்த அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அப்பகுதியில் இருந்தும் கனிமவளங்கள் கடத்தப்படுகிறது. இந்நிலையில், கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கைப்படி மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகள் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட கனிமவளங்கள் வெட்டி எடுப்பதற்கான அனுமதியை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் திருவட்டாறு அருகே கல்லுப்பாலம் மற்றும் பள்ளியாடி அருகே முருங்கைவிளை உட்பட பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ள மலைக் குன்றுகளை வெட்டு எடுப்பதற்காக தரப்பட்டுள்ள அனுமதிகளை ரத்து செய்து குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.