கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர்கோவில் அருகே பாபு என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக டீக்கடை மற்றும் பலகாரக் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு குளித்தலை மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது: 33), பாபு நடத்திவரும் டீக்கடைக்குச் சென்று அங்கு ஒரு போண்டா, ஒரு பருப்பு வடை வாங்கி உள்ளார். அதில், பருப்பு வடையைப் பாதிச் சாப்பிட்டுப் விட்டு பார்க்கையில், உள்ளே சிறிய எலி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் பாபுவிடம் கேட்டபோது, ‘அது ஒன்றும் செய்யாது. சிறிய எலிதான். அதை தூக்கிப் போட்டுட்டு வடையைச் சாப்பிடு’ என்று கூறினாராம்.
இதனால், அதிர்ச்சியடைந்த கார்த்தி, இதனை தட்டிக்கேட்டதோடு, உரிமையாளர் பாபுவிடம் முறையிட்டபோதும், அவர் கண்டும் காணாமல் அலட்சியத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து, உடனே, தனக்கு பாபு டீக்கடையில் நிகழ்ந்தது பற்றி சமூக வலைதளத்தில் கார்த்தி பதிவிட்டார். இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியதை அடுத்து, குளித்தலை காவல் நிலைய போலீஸார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட அந்த கடைக்குச் சென்று, அங்கிருந்த பொருள்களைக் கைப்பற்றி கடைக்கு சீல் வைத்தனர். பாதிக்கப்பட்ட கார்த்திக், குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.