தோனியை என்னால் மன்னிக்கவே முடியாது! கொதித்தெழுந்த யுவராஜ் சிங் தந்தை!

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் அவர் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ், தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை எம்எஸ் தோனி பாழாக்கி விட்டார் என்று அவர் மீது குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த குற்றசாட்டுகள் புதிதாக வைக்கப்படவில்லை, பல ஆண்டுகளாகவே தோனியை அடிக்கடி இப்படி அவதூறாக பேசிய வருகிறார் யோகராஜ். யுவராஜ் சிங் இந்திய அணிக்காக இன்னும் நிறைய ஆண்டுகள் விளையாடி இருக்க முடியும் என்றும், முன்னாள் இந்திய கேப்டன் தோனியால் அவரது வாழ்க்கை நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, இந்திய கிரிக்கெட் அணிக்கு யுவராஜ் சிங் ஆற்றிய பங்கிற்காக, அவரது சேவையை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று யோகராஜ் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த யுவராஜ் சிங் தந்தை யோகராஜ், “எம்எஸ் தோனியை நான் ஒருநாளும் மன்னிக்க மாட்டேன். அவர் கண்ணாடி முன்பு நின்று யுவராஜ்க்கு செய்த துரோகத்தை எண்ணி பார்க்க வேண்டும். அவர் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர் தான், அவரது சாதனைகளுக்கு நான் அவருக்கு சல்யூட் செய்கிறேன். ஆனால் அவர் என் மகனுக்கு செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அவர் செய்தது எல்லாம் தற்போது வெளியுலகிற்கு வருகிறது. அவரை என்னால் மன்னிக்க முடியாது. இந்தியாவிற்காக இன்னும் கூடுதல் ஆண்டுகள் யுவராஜால் விளையாடி இருக்க முடியும். ஆனால் தோனி எனது மகனின் வாழ்க்கையை அழித்துவிட்டார். யுவராஜ் போன்ற ஒரு மகனை பெற்றதில் பெருமைப்படுகிறேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டும் நாட்டிற்காக உலக கோப்பையை வென்று கொடுத்த அவருக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் யுவராஜ் சிங். சர்வதேச அளவில் யுவராஜ் டெஸ்ட் போட்டிகளில் 1900 ரன்களும், ஒருநாள் போட்டியில் 8701 ரன்களும், டி20 போட்டிகளில் 1177 ரன்களும் அடித்துள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலக கோப்பையை வென்ற அணியில் முக்கியவ வீரராக இருந்து வந்தார் யுவராஜ். மேலும் 2011 ஒருநாள் உலக கோப்பையில் 362 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருது பெற்றார். இந்த காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் சிறிது நாட்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். அதன் பிறகு 2012ம் ஆண்டு மீண்டும் அணிக்குள் நுழைந்தார்.

ஆனால் அதன்பிறகு அவரால் எந்த வடிவத்திலும் அவரது இடத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. தோனிக்கு முன்பே யுவராஜ் இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். இருவரும் ஒன்றாக இந்தியாவுக்காக 273 போட்டிகளில் விளையாடியுள்ளனர். குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் இந்த ஜோடி பல வெற்றிகளை குவித்துள்ளது. மிடில்-ஆர்டரில் இந்திய அணியின் முதுகெலும்பாக இவர்கள் இருந்தனர். ஒரு கட்டத்தில் யுவராஜ் பார்மில் இல்லாத காரணத்தால் ஓரம் கட்டப்பட்டார். அதன் பிறகு 2019ம் ஆண்டு ஓய்வை அறிவித்தார். தோனியுடன் மோதல் குறித்து யுவராஜிடம் கேட்கப்படும் போது, நாங்கள் இருவரும் நல்ல முறையில் கிரிக்கெட்டில் நண்பர்களாக இருக்கிறோம் என்று தெரிவித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.