உத்தரப்பிரதேசம் உள்பட பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு பல்வேறு சவால்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இந்து பெண்களை மற்ற மத வாலிபர்கள் காதலித்தால் அது `லவ் ஜிகாத்’ என்று இந்து அமைப்புகள் கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூர் சிவில் கோர்ட்டிற்கு ஒரு தம்பதி வந்தனர். அதில் வந்த பெண் பர்தா அணிந்திருந்தார். அவர் கோர்ட்டிற்கு வந்ததும், தனது பர்தாவை அகற்றி விட்டு தாங்கள் முறைப்படி திருமணம் செய்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
பர்தா அணிந்திருந்த பெண், பர்தாவை அகற்றியவுடன் அவரது நெற்றியில் குங்குமம் வைக்கப்பட்டு இருந்தது. அப்பெண் தான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தார். ஆனால் அவருடன் வந்த வாலிபர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்தார்.
அவர்கள் தங்களது திருமணத்தை முறைப்படி கோர்ட்டில் பதிவு செய்ய வந்திருப்பதாக தெரிவித்தனர். உடனே கோர்ட்டில் இருந்தவர்கள் அப்பெண்ணை சூழ்ந்து கொண்டு விமர்சனம் செய்தனர். இது குறித்து சிலர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸார் அங்கு வந்து பெண்ணை கடத்தி வந்துவிட்டதாக கூறி வாலிபரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், ”வாலிபரின் பெயர் மொகமத் ஆகும். அவரது சொந்த ஊர் சுல்தான்பூர். இருவரும் கடந்த 29-ம் தேதி வீட்டை விட்டு ஓடி வந்துள்ளனர். அப்பெண்ணை திருமணம் செய்வதற்காக பர்தா அணிய வைத்து கோர்ட்டிற்கு அழைத்து வந்துள்ளார்” என்றனர். போலீஸார் இரண்டு பேரையும் அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் கோர்ட்டில் சிறிது நேரம் சலசலப்பு உண்டானது.